கொழும்பில் கறுப்பு ஜூலை நினைவேந்தலை தடுத்த பொலிஸார் மீது சந்திரிகா சீற்றம்
"கறுப்பு ஜூலையில் கொல்லப்பட்டவர்களுக்காகக் கொழும்பில் நினைவேந்தலைக் கடைப்பிடிக்கவிடாமல் தடுத்தமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதற்குப் பொலிஸார் துணைபோனமையும் கண்டனத்துக்குரியது" எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு - பொரளையில் நேற்றுமுன்தினம் இடம்பெறவிருந்த நினைவேந்தல் நிகழ்வை சிங்கள ராவய மற்றும் பொலிஸார் - இராணுவத்தினர் இணைந்து குழப்பியிருந்தனர்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த சந்திரிகா, "கறுப்பு ஜூலை கலவரமொன்று மீண்டும் நாட்டில் இடம்பெறக்கூடாது என்பதுதான் ஜனநாயகத்தை விரும்பும் அனைவரினதும் பிரார்த்தனையாகும்.
நினைவேந்தல் மக்களின் உரிமை
அந்தச் சம்பவம் எதனால் இடம்பெற்றது என்பது தொடர்பில் விளக்கமளிக்கவேண்டிய அவசியமில்லை.
அந்தக் கலவரத்தில் உயிரிழந்தவர்களைக் கொழும்பில் நினைவேந்த முற்பட்டமையைத் தடுத்து நிறுத்தியமை கண்டிக்கத்தக்கது.
அங்கு பொலிஸார் நடந்துகொண்ட விதமும் கண்டனத்துக்குரியது.
மக்கள் தம் நினைவேந்தல் உரிமையின் பிரகாரம் உயிரிழந்தவர்களை நினைவேந்தியபோதும் அதை இனவாதநோக்குடன் பார்த்த அந்த இனவாத அமைப்பையும் நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
மீண்டும் ஒரு கலவரத்துக்குத் தூபமிடும் இத்தகைய இனவாத அமைப்புக்கள் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |