பாஜகவின் தேசிய செயலாளரை சந்தித்த ஸ்ரீநாத் எம்.பி! வழங்கப்பட்டுள்ள உறுதிமொழி
பாஜகவின் தேசிய செயலாளர் மா.வெங்கடேசனை இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.ஸ்ரீநாத் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது இன்று(24.10.2026) சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இடம்பெற்றதாக மா.வெங்கடேசன் தெரிவித்தார்.
இதன்போது, இலங்கை தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், வாழ்க்கை, அரசியல் உரிமைகள் ஆகியவற்றைப் பற்றி மிக விரிவாக கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கைத் தமிழர்கள்
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாது, இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை இன்னல்களின் தீர்வுகளுக்கும், அரசியல் உரிமைகளுக்கும் இலங்கைத் தமிழர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு களமாடிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்கள் அவற்றைப் பெற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

இலங்கைத் தமிழர்களை காவு கொடுத்துவிட்டு அவர்களின் பிணங்களின் மீது அரசியல் செய்துகொண்டிருக்கும் சில தமிழக கட்சிகளை அவர்கள் இனி நம்பத் தயாராக இல்லை. பாஜகவினால் மட்டுமே அவர்களின் முன்னேற்றம் சாத்தியப்படும்.அதை அவர்களும் உணர்ந்திருக்கிறார்கள்.
இலங்கைத் தமிழர்களின் வாழ்வியல், பண்பாட்டு - அரசியல் உரிமைப் பிரச்சினைகளை மாநில, தேசிய பாஜகவிடம் கொண்டு சென்று தீர்வுக் காணப்படும் என்று உறுதியளித்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.