கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிப்பு சம்பவம் - பறவைகளுக்கு வைக்கப்பட்ட இலக்கு
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் மூன்று அதிகாரிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு மேல் பறந்த பறவைகளை இலக்கு வைக்கப்பட்ட வெடிபொருள் வானில் வெடிக்காமல், நிலத்திலுள்ள வாகனம் ஒன்றின் மீது வீழ்ந்து வெடித்துள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக பறவை ஆபத்து கட்டுப்பாட்டு பிரிவை சேர்ந்த மூன்று அதிகாரிகள் காயமடைந்த நிலையில், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
விமான சேவைக்கு பாதிப்பு
விமான சேவைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பறவைக்கூட்டம் ஓடுபாதையின் மேல் பறந்தமையினால் அதனை கலைக்கும் நடவடிக்கை இன்று காலையில் முன்னெடுக்கப்பட்டது.
இதற்காக மூன்று அதிகாரிகள் வாகனத்தில் ஓடுபாதைக்குச் சென்று, பறவைக் கூட்டத்தை பயமுறுத்துவதற்காக ஸ்கை ஸ்டிக் போன்ற வெடிபொருட்களைக் கொண்ட துப்பாக்கிச் சூடுகளை நடத்தினர்.
அந்த குண்டு வெடிக்காமல், அதிகாரிகள் பயணித்த வாகனத்தின் மீது விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.