81.5 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தரவுகள் கசிவு: அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவைச் சேர்ந்த இணையத்தள பாதுகாப்பு என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ரெசிக்யூரிட்டியின் அறிக்கையின்படி இந்தியாவில் மிகப்பெரிய தரவு கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 815 மில்லியன் அதாவது 81.5 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் அடையாளம் காணக்கூடிய விடயங்கள் இணையத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
அச்சுறுத்தும் நபர்
தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு விபரங்கள், பெயர்கள், தொலைபேசி எண்கள் மற்றும் முகவரிகள் உள்ளிட்ட தகவல்கள் இணையத்தில் தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் தரவுத்தளத்தில் உள்ள தகவல்களின் பரந்த வீச்சு மற்றும் உணர்திறன் காரணமாக சமரசம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
குறித்த நபர் 'pwn001' என்ற மாற்றுப்பெயரைப் பயன்படுத்தி தன்னை ஒரு 'அச்சுறுத்தும் நபர்' என்று அழைத்துக் கொண்டு, ப்ரீச் ஃபோரம்களில் ஒரு நூலை வெளியிட்டதுடன் அவர் 'எக்ஸ்' தளத்தில், ஒரு தரவுத்தளத்தை விளம்பரப்படுத்தியுள்ளார்.
இந்த தரவுத்தளத்தில் 81.5 மில்லியன் இந்திய குடிமக்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள் மற்றும் முகவரிகளுடன் ஆதார் மற்றும் கடவுச்சீட்டு தகவல்களை உள்ளடக்கிய பதிவுகள் உள்ளன.
குடிமக்களின் கோவிட் தொற்றின் சோதனை விபரங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகள் இந்திய மருத்துவ ஆராய்சி மையத்தில் இருந்து பெறப்பட்டவை என்று 'அச்சுறுத்தல் நபர்' தெரிவித்துள்ளார்.
இணைய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்க நிறுவனமான ரெசெக்யூரிட்டி, இந்த கசிவை முதலில் கவனித்ததாக தெரிவித்துள்ளது.
பகுப்பாய்வு செய்து பார்த்தபோது, இணையத்தில் உள்ள அடையாள அட்டைகள் யாவும் உண்மையானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.