விமான நிலையத்தில் தலைமுடி சாயங்களுக்குள் சிக்கிய பெருந்தொகை போதை மாத்திரைகள்
சட்டவிரோதமான முறையில் 60,460 போதை மாத்திரைகளை (34 கிலோ) நாட்டிற்கு இறக்குமதி செய்த சந்தேகநபர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணிகள் வருகை முனையத்தின் ஊடாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார். அவரது பயணப்பொதிகளை பரிசோதித்த போது, தலைமுடி சாயங்களுக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டு போதை மாத்திரைகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்கள் மாற்று மருந்தாக இந்த மாத்திரைகளை பயன்படுத்துவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், 40 வயதான திகன, ரஜவெல்ல பகுதியைச் சேர்ந்தவராகும்.
சந்தேகநபர் நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், 07 நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.