கடந்த காலத்தில் அபிவிருத்திகள் நடைபெறாமலிருந்ததற்கு யுத்தம் காரணம் அல்ல: பிரசாந்தன்
கடந்த காலத்தில் வீதிகள் உள்ளிட்ட அபிவிருத்திகள், நடைபெறாமலிருந்ததற்கு யுத்தம் காரணம் அல்ல என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சினால் களுதாவளைப் பகுதியில் வீதிகளுக்குக் கார்பட் இட்டு புனரமைப்புச் செய்யும் வேலைத்திட்டம் இன்று (15.04.2024) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அபிவிருத்திகள் பின்னடைவு
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“பாதை சீர் இன்மை காரணமாகவே தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் கல்வி பின்னடைந்ததற்கு காரணமாகும். எனவே பாதைகளைச் செப்பனிடும்போது அப்பிரதேசம் தாமாகவே வலுவடையும்.
தமிழர்களின் அடையாளங்களாகத் திகழ்கின்ற ஆலயங்களுக்குச் செல்லும் வீதிகள் அடங்கலாக அனைத்து வீதிகளையும் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சர் செவ்வனே செப்பனிட்டு வருகின்றார்.
கடந்த காலத்தில் வீதிகள் உள்ளிட்ட அபிவிருத்திகள் நடைபெறாமலிருந்ததற்கு யுத்தத்தைக் காரணம் காட்டுகின்றார்கள். உண்மையிலே அவற்றுக்கு யுத்தம் காரணம் அல்ல.
அபிவிருத்திகள் பின்னடைந்ததற்கு நாம் வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பிய தலைவர்களே காரணமாகும். ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி போன்ற பகுதிகளைப் பாருங்கள் என அனைவரும் அடிக்கடி சுட்டிக்காட்டுகின்றார்கள்.
அந்த சமூகத்தினர் வாக்களித்து அனுப்பிய தலைவர்கள் அவர்களுக்குச் சார்பாக வேலை செய்கின்றார்கள். மாறாக நாம் ஒவ்வொரு தடவையும் வாக்களிப்பதற்குத் தவறுவதில்லை.
குறிப்பாக பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தல்களில் ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்களைத் தெரிவு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்புகின்றோம்.
அவ்வாறான தலைவர்கள் சரியாகச் செயற்படுகிறார்களா என்பதை அளந்து பார்க்க வேண்டியது மக்கள் தான்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |