அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கிடையிலான பயண கட்டுப்பாடுகள் நீக்கம்
அவுஸ்திரேலியா - நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடற்ற விமானப்பயண சேவைகள் இன்னும் இரு வாரங்களில் ஆரம்பமாகவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுவரை காலமும் நியூசிலாந்து பயணிகள் மாத்திரம் அவுஸ்திரேலியாவுக்கு தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவுஸ்திரேலியர்களும் இனி நியூசிலாந்துக்கு பயணம் செய்ய முடியும் என நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern இன்று அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி எதிர்வரும் ஏப்ரல் 18ம் திகதி இரவு 11.59 மணி முதல் அவுஸ்திரேலியர்கள் நியூசிலாந்தின் எந்தப் பகுதிக்கும் பயணம் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நியூசிலாந்துக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடற்ற பயணம் மேற்கொள்ளும் ஒருவர் கோவிட் தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமென்பது கட்டாயமல்ல எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,இரு நாடுகளுக்கிடையிலான இப்பயண ஏற்பாடு மகிழ்ச்சியான ஒன்று என்ற போதிலும் இவ்விரு நாடுகளில் ஏதேனும் ஒரு பகுதியில் கோவிட் பரவல் அடையாளம் காணப்பட்டால் மக்கள் தமது பயண ஏற்பாடுகளில் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும் என்பதுடன், தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட நேரிடலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் நியூசிலாந்து பிரமதர் தெரிவித்துள்ளார்.