பெலாரஸில் பயிற்சிகள் நீடிப்பு! யுக்ரெய்னில் உடனடி ஆக்கிரமிப்பு குறித்து அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை!(வீடியோ)
பெலாரஸில் ரஸ்யாவின் இராணுவப் பயிற்சிகள் நீடிக்கப்பட்டுள்ளன.
இது யுக்ரெய்ன்; மீதான உடனடி ஆக்கிரமிப்பு குறித்து மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று அமெரிக்க ராஜாங்க செயலாளர் எண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.
கிழக்கு யுக்ரைனில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், யுக்ரைனுக்கு அடுத்தபடியாக பெலாரஸில் சுமார் 30,000 துருப்புக்களை வைத்திருக்கும் மொஸ்கோ அங்கு பயிற்சிகளை நடத்தி வருகிறது
அடையாளம் காட்டிக்கொள்ளாத அமெரிக்க உளவுத்துறை தரப்புக்கள், ரஸ்ய தளபதிகள் படையெடுப்புக்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாக வெளியான தகவலை அடுத்தே, ராஜாங்க செயலாளரின் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் உடனடியாக ரஸ்யாவின் படையெடுப்பு சாத்தியமற்றது என்று யுக்ரெய்ன் கூறியுள்ளது. அதன் பாதுகாப்பு அமைச்சர் எலெக்ஸி ரெஸ்னிகோவ், எல்லைக்கு அருகில் ரஸ்ய படையினர் இன்னும் நிறுத்தப்படவில்லை என்பதால், "நாளை அல்லது நாளை மறுநாள்" தாக்குதல் நடக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
எனினும் அண்டை நாடு மீது படையெடுக்கும் திட்டத்தை ரஸ்யா தொடர்ந்தும் மறுத்து வருகிறது.
இதேவேளை ஞாயிற்றுக்கிழமை முடிவடையவிருந்த பெலாரஸில் பயிற்சிகள் நீடிக்கப்படுவதற்கு கிழக்கு யுக்ரைனில் நிலைமை மோசமடைந்தமையே ஒரு காரணம் என்று பெலாரஸ் தெரிவித்துள்ளது
இந்த வார இறுதியில் யுக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் யுக்ரைன் படைகளுக்கும் ரஸ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வருவதையே பெலாரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் பிரான்ஸின் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரானுக்கும் இடையே இரண்டு மணிநேர தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கிழக்கு யுக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு இராஜதந்திர தீர்வின் அவசியம் குறித்த பேசப்பட்டதாக மொஸ்கோ கூறியுள்ளது.
அத்துடன் பெலாரஸில்; இருந்து ரஸ்ய துருப்புக்கள் திரும்பப்பெறப்படும் என்றும் புடின் உறுதியளித்துள்ளார்.



