ஐரோப்பாவில் இருந்து இலங்கைக்கு மற்றுமொரு நேரடி விமான சேவை
பெலாரஸின் தேசிய விமான நிறுவனமான பெலாவியா எயார்லைன்ஸ், இந்த ஆண்டு இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பெலாவியா எயார்லைன்ஸின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
விமான இணைப்பு மற்றும் சுற்றுலா உறவு
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு விமான இணைப்பு மற்றும் சுற்றுலா உறவுகளை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க படிநிலையாக இது கருதப்படுகிறது.
இலங்கையின் அழகிய கடற்கரைகள், கலாசார பாரம்பரிய தளங்கள் மற்றும் ஆண்டு முழுவதும் வெப்பமண்டல காலநிலை ஆகியவை ஐரோப்பிய சுற்றுலா பயணிகளுக்கு ஒரு கவர்ச்சிகரமான நீண்ட தூர இடமாக மாற்றியுள்ளன என்று பெலாவியா எயார்லைன்ஸ் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
பெலாரஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான விமான இணைப்பை மேம்படுத்துவது சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளையும் வலுப்படுத்தும் என்று இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
சுற்றுலாத் தளம்
ஆசியாவில் ஒரு முன்னணி சுற்றுலா இடமாக இலங்கை தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்குள் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அடைவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வையை ஆதரிக்கும் நேரடி விமான இணைப்பாக இது மாறும் என சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் மேலும் சுட்டிக்காட்டுகிறது.



