இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் பறிமுதல்
கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி கரையோரப் பகுதியில் இந்தியாவிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இன்று(05.04.2024) புத்தளம் (Puttalam) பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் புத்தளம் கலால்வரித் திணைக்களத்தினருடன் இணைந்து குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இதன்போது சுமார் 40 உறைகளில் 1200 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாகவும் இதன்போது எவரும் கைது செய்யப்படவில்லையென்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியெனவும், கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் புத்தளம் கலால்வரித் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கூறியுள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புத்தளம் கலால்வரித் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |