மூடி மறைக்கப்பட்ட கோட்டாபயவின் இயலாமை! ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நடந்தது தொடர்பில் வெளிவரும் தகவல்
கோட்டாபய ராஜபக்சவின் பொருளாதாரம் தொடர்பான இயலாமை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரியவந்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். கோட்டாபய ராஜபக்சவுக்கு பொருளாதாரம் தொடர்பிலான இயலாமை மூடி மறைக்கப்பட்டது.
பெரும்பாலான ஊடகங்களும் அதனை மறைத்தன. ஒருவரின் இயலாமையை மறைத்து அவர் நாட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு வருவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது.
பொருளாதாரத்தை வழிநடத்த அனுபவம் இருக்க வேண்டும். அனைத்து அமைச்சுக்களுக்கும் செயலணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களுக்கு செய்வதற்கு வேலையில்லை.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. உள்நாட்டு, வெளிநாட்டு செய்தியாளர்கள் அதில் கலந்துக்கொண்டனர்.
இறுதியில் பொருளாதாரம் தொடர்பாக இரண்டு மூன்று கேள்விகள் கேட்கப்பட்டன. பதில் வழங்கினாரா?. கோடிஸ்வரன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் போல், லைப் லைன் போன்று மகிந்த ராஜபக்சவிடம் உதவியை கோரினார்.
பொருளாதாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை என்றால் எப்படி நாட்டை ஆட்சி செய்வது?.
எனினும் ஊடகங்கள் இதனை மூடிமறைத்தன. இயலாமையை மறைத்தன. இயலாமை கொண்ட ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வந்தமை தொடர்பில் ஊடகங்கள் பொறுப்புக் கூற வேண்டும். வெளிநாட்டில் இப்படி நடந்திருந்தால், அந்த வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டிருப்பார் எனவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.