பவித்ராதேவி வன்னியாராச்சியின் வர்த்தமானிக்கு எதிராக தடை விதித்த உயர்நீதிமன்றம்
வில்பத்துவில் உள்ள விடத்தல்தீவு இயற்கை சரணாலயத்தின் ஒரு பகுதியை இறால் பண்ணை திட்டத்திற்காக ஒதுக்கி, வனஜீவராசிகள் அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு, உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அத்துடன், மனு மீதான விசாரணை முடியும் வரை இந்த இடைக்கால உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாதாரண வர்த்தமானி
கடந்த மே மாதம், விடத்தல்தீவு இயற்கைக் காப்பகத்தின் ஒரு பகுதியை மீன்வளர்ப்பு கைத்தொழில் பூங்கா அமைப்பதற்கான அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டது.
இதன்படி குறித்த பிரதேசம், கடல் மீன் வளர்ப்பு தொழில் பூங்கா, கடல் மீன்கள், நண்டுகள் மற்றும் அயல்நாட்டு வகை இறால் உள்ளிட்ட பல்வேறு இனங்களின வளர்ப்புக்காக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேநேரம், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி வெளியிட்ட குறித்த வர்த்தமானியின் பிற்சேர்க்கையில், இனிமேல் இந்தப்பகுதி விடத்தல்தீவு இயற்கைக் காப்பகத்தின் ஒரு பகுதியாக குறிப்பிடப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் உட்பட பல சுற்றுச்சூழல் குழுக்கள் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
இதேவேளை, நாட்டின் மூன்றாவது பெரிய கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதியான விடத்தல்தீவு இயற்கைக் காப்பகம் 1956-13 வர்த்தமானி மூலம் 2016 மார்ச் 1ஆம் திகதியில் 29,000 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |