மட்டக்களப்பில் மண் மாபியாக்களின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி குழு தீர்மானங்களை மீறி சிங்கள பெரும்பான்மை மண் மாபியாக்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கும் செயற்பாடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் மண் அனுமதி பத்திர உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது குறித்து உள்ளூர் மண் அனுமதி பத்திர உரிமையாளர்கள் ஆவணங்களை சமர்ப்பித்து தெரிவிக்கும் போது இவ்வாறு கூறியுள்ளனர்.
ஏறாவூர் பற்று பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறி செங்கலடி பிரதேச செயலாளர் மண் அனுமதி பத்திரம் வழங்குவதற்கு சிபாரிசு செய்துள்ளார்.
மண் அனுமதி பத்திரம்
இவ்வாறு பிரதேச செயலாளர் கையொப்பம் இட்டு புவிச்சரிதவியல் திணைக்களத்திற்கு அனுப்பியுள்ள பெயர் விபரங்களை நாங்கள் பெற்றுள்ளோம்.
குறித்த பெயர்களில் அதிகமான பெயர்கள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்களுக்கே அதிக மண் அனுமதி பத்திரம் வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
புவிச்சரிதவியல் திணைக்களத்திற்கு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களின் படி 13 பெரும்பான்மை இனத்தவர்களுக்கு கிரவல், ஆற்று மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்குமாறு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் மண் அனுமதி பத்திர உரிமையாளர்கள்
இதன்படி 95 வீதம் தமிழ் பேசும் மக்கள் உள்ள மாவட்டத்தில் ஏற்கனவே உள்ளூரில் மண் அனுமதி பத்திரம் உள்ளவர்களுக்கு தங்களது மண் அனுமதி பத்திரத்தை புதுப்பிக்காது வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இன முதலாளிகளுக்கும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கும் மண் அனுமதி பத்திரம் வழங்குவதாக கோரி இராஜாங்க அமைச்சரிடம் மட்டக்களப்பு மாவட்ட கனிப் பொருள் அனுமதி பத்திர உரிமைகள் சங்கம் முறையிட்டிருந்தனர்.
ஏற்கனவே செங்கலடி பிரதேச அபிவிருத்தி குழு தீர்மானத்தின் ஊடாக ஆற்றுமணல் அகழ்வு மற்றும் கிரவல் அனுமதிக்கு தடை விதித்திருந்த நிலையில் புதிய அனுமதிப் பத்திரங்களை வழங்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
ஆனால் மேற்படி தீர்மானங்களை எல்லாம் புறக்கணித்து செங்கலடி பிரதேச செயலாளரினால் புவிச்சரிதவியல் திணைக்களத்திற்கு மேற்படி பெயர் பட்டியல் அனுப்பபட்ட நிலையில் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறி அனுப்பபட்ட சிபாரிசுகளை நிறுத்துமாறு இராஜாங்க அமைச்சர் அரசாங்க அதிபருக்கு அறிவித்ததன் அடிப்படையில் குறித்த பெயர் பட்டியலை நிறுத்தி வைக்குமாறு அரசாங்க அதிபர் புவிச்சரிதவியல் திணைக்களத்திற்கு வேண்டுகோள் விடுத்ததன் பிரகாரம் அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சருக்கு எதிரான உண்ணாவிரதம்
இந்நிலையில், மேற்படி பிரதேச செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்ட பெயர் பட்டியலை இடைநிறுத்தியதன் காரணமாகவே இராஜாங்க அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் அவருக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தான் அனுப்பி வைத்த பெயர் பட்டியலுக்கு இராஜாங்க அமைச்சரினால் தடை ஏற்படுத்தப்பட்ட நிலையில் மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலக வீதியில் மண், கிரவல் அனுமதி பத்திரம் கோரியும், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் அபிவிருத்தி குழு தலைவர் பதவியை பறிக்க கோரியும் நேற்று ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை குளிர்பானம் கொடுத்து நிறைவு செய்ததோடு இராஜாங்க அமைச்சரின் தலையீடு இன்றி மண் அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி மொழி வழங்கி உள்ளார்.
அபிவிருத்தி குழு கூட்டம் எதற்காக?
மாவட்ட அபிவிருத்தி குறித்தும் மக்கள் பிரச்சினைகள் குறித்தும் தீர்மானிப்பதற்காக அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட அபிவிருத்தி குழு கூட்டத் தீர்மானங்கள், அதற்காக நியமிக்கப்பட்ட அபிவிருத்தி குழு தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த தீர்மானங்களை மதிக்காது மண் மாபியாக்களுக்கு பயந்து தன்னிச்சையாக மண் அனுமதி பத்திரம் வழங்குவதற்கு பிரதேச செயலாளர் முடிவு செய்தது எப்படி? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும், கடந்த காலங்களில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரம் 1350 மண் அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அளவுக்கு அதிகமான மண் அனுமதி பத்திரத்தை வழங்குவதற்கு காரணம் அரச அதிகாரிகளே.
இதனால் எமது மாவட்ட மண் வளம் அழிக்கப்படுகிறது, விவசாய நிலங்கள், குளங்கள், குளக்கட்டுக்கள், பாதிக்கப்படுகிறது. ஆற்று மணல் அகழ்வுக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள் ஆனால் இவற்றை எல்லாம் கணக்கில் எடுக்காது கட்டாயம் ஆற்று மணல் அகழ்வு, கிரவல், கல்குவாரி அனுமதி பத்திரம் போன்றவற்றை வெளி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு அவசர அவசரமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் கொழும்பில் இருந்து வந்த பெரும்பான்மை இன மண் மாபியாக்களால் மட்டக்களப்பு மாவட்ட வயல் நிலங்கள் தொடங்கி குளங்கள், வீதிகள் , என அனைத்தும் அழிக்கப்பட்டு இதுவரை சீர் செய்யாத நிலையில் இதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் அது குறித்து கவனம் செலுத்தாது மீண்டும் மீண்டும் மண் அனுமதி பத்திரம் வழங்குவதன் நோக்கம் என்ன? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |