அடிப்படை வசதிகள் இன்றி வியாபார நடவடிக்கை! மட்டக்களப்பில் போராட்டம்
அடிப்படை வசதிகள் இன்றி, பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தங்களுடைய வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்து மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினரால் நேற்றையதினம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்வேறு கஷ்டங்களை தாங்கள் எதிர்கொண்டு வருகிறோம் என பதாகைகள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை நிவர்த்தி செய்து தருமாறு பலமுறை தவிசாளரிடம் தெரிவித்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக பொதுச் சந்தை வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டி இருந்தமை காணக்கூடியதாக இருந்தது.
பின்னர் போராட்டக்காரர்கள் ஆரையம்பதி பொதுச்சந்தையிலிருந்து மண்முனை பற்று பிரதேச சபை வரை நடை பேரணியாக கோஷங்கள் எழுப்பி பிரதேச சபை வரை சென்றடைந்து பிரதேச சபை முன்னால் வியாபார உரிமையாளர்கள், வியாபாரிகள் ஒன்று திரண்டு பாரிய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு ஒன்று திரண்ட வியாபார உரிமையாளர்கள் வர்த்தகர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தை தொடர்ந்து வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் மண்முனைபற்று பிரதேச செயலாளர் ரோகினி விக்னேஷ்வரனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் அவரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
செயலாளர் எந்தவித சாதகமான பதிலை தெரிவிக்காத நிலையில் போராட்டக்காரர்கள் இதைவிட நாளை பாரிய போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்து அங்கிருந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
இது தொடர்பில் மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் செந்தில்குமாரைதொடர்புகொண்டு கேட்டபோது,குறித்த சந்தைப்பகுதியை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுத்துவரும் நிலையில் அதனை குழப்பும் வகையில் சிலர் செயற்படுவதாக தெரிவித்தார்.
ஆரையம்பதி சந்தையின் சில பகுதிகளை நீண்டகாலமாக சிலர் ஆட்சிசெய்துவரும் நிலையில் அனைவருக்கும் சமமானமுறையில் வியாபாரத்திற்கான இட ஒதுக்கீட்டை நோக்காக கொண்டு சந்தைப்பகுதியில் கட்டுமானங்களை முன்னெடுக்கமுனைந்த நிலையிலேயே இந்தபோராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்தார். சந்தைப்பகுதியை முழுமையாக அபிவிருத்தி செய்வதன் மூலம் வியாபாரிகள் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வினை வழங்கமுடியும் என தெரிவித்தார்.





