மயிலத்தமடு மாதவணை பிரச்சினைக்கு தீர்வு கோரி போராட்டம் முன்னெடுப்பு
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கோரிய தொடர் போராட்டத்தின் 02 வருட பூர்த்தியைக் கருதி பாரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்றையதினம்(15) சித்தாண்டியில் இடம்பெற்றுள்ளது.
மேய்ச்சல் தரை தொடர்பில் தீர்க்கமான முடிவு
மயிலத்தமடுவில் உள்ள சட்ட விரோத பயிர்ச் செய்கையாளர்களை வெளியேற்று, பண்ணையாளர்கள் தமிழர்கள் என்பதாலா தீர்வு வழங்குவதில் தாமதம், கால்நடை பண்ணையாளர்களின் கோரிக்கையினை நிறைவேற்று, பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்கு மேய்ச்சல் தரையினை வழங்கு போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாரம்பரியமாக காலநடை வளர்ப்பாளர்களால் மேய்ச்சல் தரையாகப் பயன்படுத்தப்பட்டு வந்த மயிலத்தமடு மாதவணை மேய்ச்சல் தரை பிரதேசத்தை தங்களின் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையாக வர்த்தமானி பிரகடனப்படுத்தக் கோரி கடந்த 2023 ஆண்டு இதே நாளில் கால்நடை பண்ணையாளர்கள் தங்கள் தொடர் கவனயீர்ப்பினை முன்னெடுத்திருந்தனர்.
இருப்பினும் அரசாங்கங்கள் மாறினாலும் குறித்த மேய்ச்சல் தரை விடயம் தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவு எந்த அரசாங்கத்தினாலும் எடுக்கப்படாமை குறித்தும் தங்களின் கோரிக்கைக்கு எந்த அரசும் நிரந்தரத் தீர்வினை வழங்க முன்வரவில்லை என்ற நிலைப்பாட்டில் இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், இ.சிறிநாத், பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், கால்நடை வளர்ப்பாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மயிலத்தமடு மாதவணை கால்நடை பண்ணையாளர்களின் மனு ஒன்று அரசாங்கத்திற்கு வழங்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சங்கத்தின் தலைவர் நிமலனால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










