மட்டக்களப்பில் யானைவெடி வெடித்ததில் ஒருவர் பலி: 6 பேர் கைது
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பிரதேசமான வாகரை, ஓமடியாமடுவில் உள்ள விகாரையொன்றில் யானைவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் நாகஸ்த்தன, வெலிக்கந்தவைச் சேர்ந்த சிசிரகுமார (வயது 27) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஓமடியாமடு, சுதுகல ஆரன்னிய விகாரையின் முதியலங்கார சுபாத்தாலங்கார தேரருடன் சேர்ந்து 8 பேர் இருந்துள்ள நிலையில் முதலில் வெடிச்சத்தம் கேட்டுள்ளதுடன், பின்னர் பலர் கூச்சலிட்ட சத்தமும் கேட்டுள்ளது.
இதனை தொடர்ந்து என்னவென பார்ப்பதற்காக அருகில் வயல் செய்கையில் இரவு நேர காவலில் ஈடுபட்டவர்கள் சிலர் சென்றுள்ளனர்.
இதன்போது இளைஞரொருவர் வயிற்றுப் பகுதியில் காயத்துடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ள அதேவேளை சம்பவத்தில் காயமடைந்த தேரர் பொன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேரருக்கும் உயிரிழந்த நபருக்குமிடையில் இடம்பெற்ற கருத்து மோதல் காரணமாக கோமடைந்த தேரர், யானை வெடியினை கொழுத்தி வெடிக்க வைத்துவிட்டு காட்டுப் பகுதிக்கு சென்று ஒளிந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



