பயணத்தடையை தொடர்ந்து வழமைக்கு திரும்பியுள்ள மட்டக்களப்பு மாவட்டம்
பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையானது இன்று அதிகாலை முதல் நீக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதை காணமுடிகின்றது. இன்று காலை முதல் அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் மக்களின் வருகை குறைவானதாகவே இருக்கின்றது.
வங்கிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதுடன் ,சில வங்கிகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத நிலையினை காணமுடிகின்றது. வீதிகளில் பெருமளவான மக்கள் நடமாடுவதும் தனிநபர்கள் போக்குவரத்தும் அதிகளவில் ஈடுபட்டு வருவதை காணமுடிகின்றது.
தனியார் பேருந்துகள் இன்று காலை முதல் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன் ஒரு சில இலங்கை போக்குவரத்து சேவை பஸ்களும் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
இதேவேளை இன்று மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியில் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகிய நிலையில் நீதிமன்றத்திற்கு வெளியே பெருமளவானோர் ஒன்று கூடி நின்றதை காணமுடிந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்கள் இவ்வாறு பொறுப்பற்ற வகையில் செயற்படுவது மாவட்டத்தினை ஆபத்து நிலைக்கு தள்ளிவிடும் என சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர்.