மட்டக்களப்பில் விவசாயத்திற்கு பயன்படாத நிலங்கள் அதிகம்: பிரபு எம்.பி சுட்டிக்காட்டு
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் விவசாயத்திற்கு பயன்படாத நிலங்கள் அதிகம் உள்ளதாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு (Prabhu Kandasamy) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, கடந்த காலங்களில் இலங்கையில் இருந்து அரிசி ஏற்றுமதி செய்த சந்தர்ப்பங்கள் இருந்த போதும் தற்போது நாம் அதனை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இவற்றையெல்லாம் மாற்ற வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (16.01.2025) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
விவசாயத்திற்கு பயன்படாத நிலங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்திற்கு பயன்படாத நிலங்கள் அதிகம் உள்ளன. நீர்பாசன திட்டங்களில் சில குறைபாடுகள் இருப்பதன் காரணமாக பெரிய நீர்ப்பாசன திட்ட வேலைகளை முன்னெடுக்க முடியாத நிலைமை உள்ளது.
முந்தனையாறு திட்டமும் குறைந்த அளவிலான நிதிகளை அரசாங்கம் ஒதுக்கி இருந்த போதும் அந்தத் திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் கைவிடப்பட்டுள்ளது.
கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் ஊடாகவும் சமூகத்தில் கட்டமைப்பை உருவாக்கி நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எமது வேலை திட்டத்தின் நோக்கமாகும்.
அமைச்சுக்களுடன் பேச்சுவார்த்தைகள்
பொருளாதாரத்தில் பின்னி நின்ற அரசாங்கத்தை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எமது நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதே எமது நோக்கம்.
மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தும் கட்டிடங்களை புனரமைத்து அறுவடை செய்கின்ற வேளாண்மையை களஞ்சியப்படுத்த வேண்டிய நிதிகளை பெறுவதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், எதிர்காலத்தில் அவற்றுக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |