சாணக்கியன் மக்கள் போராட்டங்களில் அரசியல் இலாபம் தேடுவதை நிறுத்த வேண்டும்..!
சாணக்கியன் மக்கள் போராட்டங்களில் அரசியல் இலாபம் தேடுவதை நிறுத்தவேண்டும் என வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று(07.02.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
தடை உத்தரவு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 4ஆம் திகதி இடம் பெற்ற கறுப்பு தின போராட்டத்தை வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரும் சேர்ந்து வடக்குக் கிழக்கு தழுவிய போராட்டமாக நாங்கள் அதனை ஏற்பாடு செய்திருந்தோம்.
இந்த ஏற்பாட்டின் பிற்பாடு எங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
எம்மை கஷ்டப்படுத்தி இலங்கை பொலிஸாரால் துரத்தி தடை உத்தரவுகள்
தரப்பட்டது.
அதனால் நாங்கள் அடுத்த கட்டமாக போராட்டத்தை நடத்துவதற்காக மதகுருமார்களை ஒழுங்குபடுத்தியிருந்தோம். முகநூலில் பார்க்கக் கூடியதாக இருந்தது கறுப்பு தின போராட்டம் ஆனது சாணக்கியனின் தலைமையில் இடம்பெற்றது என்று.
இதனை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டிய தேவை எனக்கு இருக்கின்றது சம்பந்தப்பட்டவர்களுக்கும் தெளிவூட்ட வேண்டிய தேவை இருக்கின்றது.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஆகிய நாங்கள் தனித்துவமாகவே எங்களது போராட்டங்களை செய்து வருகின்றோம். எங்களுடைய போராட்டம் ஒரு அமைப்பாகவோ அல்லது அரசியல் தலையிடும் இல்லாமல் நாங்கள் ஒரு சுயமான தாய்மாராக இணைந்து செய்த போராட்டம் தான் 2012 ஆம் ஆண்டில் இருந்து இந்த போராட்டங்களை நடத்தி வருகின்றோம்.
பொதுவான அழைப்பு
வடக்கு கிழக்கு இணைந்த ஒரு போராட்டமாக தாய்மார் ஆகிய நாங்கள் செய்து வருகின்றோம். அதற்காக நாங்கள் மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும்.
நமது அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் ஊடாக எமக்கு நடந்த அநியாயங்களுக்கும் எமக்கு நடந்த காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகவும் தமிழர்களுக்கு நடந்த இன அழிப்புக்குமான நீதி கோரும் போராட்டங்களை அடுத்த சந்ததிக்கும் மக்களுக்கும் தெளிவுபடுத்தி இதனை கொண்டு போக வேண்டிய தேவை எங்களிடம் இருந்தது.
அதனால் தான் நாங்கள் தனித்துவமாக போராட்டத்தை செய்து மக்கள் மயப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துதான் நாங்கள் அனைவருக்கும் பொதுவான அழைப்பை விடுத்து நாங்கள் இந்த போராட்டங்களை செய்து வருகின்றோம்.
அந்த வகையில் எங்களுடைய போராட்டங்களை திசை திருப்புகின்ற வகையில்
அரசியல்வாதிகள் கையில் எடுத்து செய்வதாக பல விமர்சனங்கள் கடந்த நான்காம் திகதி போராட்டத்தின் பிற்பாடு எனக்கு வந்திருந்தது.
அதேபோன்று சில அமைப்புகளும் கையில் எடுத்து செய்வதாக விமர்சனங்கள் வருகின்றது ஆனால் இதனை உண்மையிலேயே ஏற்பாடு செய்தது பல்கலைக்கழக மாணவர்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கமும் மாத்திரமே அதனை யாரும் உரிமை கோரமுடியாது என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |