மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நியமனத்தில் அரசியல் தலையீடு: இரா.துரைரெட்னம் குற்றச்சாட்டு
அரசியல் கட்சிகளின் தலையீட்டிற்கு இடமளிக்கப்போவதில்லை என மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருக்கும் முரளீதரனுக்கு மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரெட்னம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு. ஆனால் ஆளும் கட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் தலையிடாமல் இருப்பார்களா? அவரின் நியமனக்கடிதம் வழங்கப்பட்ட போதே அங்கு ஒட்டிக்கொண்டிருந்த அரசியல்வாதி தனது சிபாரிசில் தான் இந்த நியமனம் நடைபெற்றதாக கூறி வருகின்றார்.
ஆளும் கட்சி அரசியல்வாதிகள் தலையீடு
அவரின் கட்சியின் முகநூலிலும் அப்படத்தை போட்டு செய்தியை வெளியிட்டு புதிய அரசாங்க அதிபருக்கு அரசியல் சாயம் பூசிவிட்டார்கள். அவரின் நிர்வாக கடமைகளில் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் தலையீடு செய்ய மாட்டார்கள் என்ற உத்தரவாதம் எதுவும் இல்லை.
கடந்த காலங்களில் இருந்த அரசாங்க அதிபர்கள் சிலர் முழுக்க முழுக்க ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் கைப்பொம்மையாகவே செயற்பட்டனர்.
குறிப்பாக சாள்ஸ் மட்டக்களப்பு மாவட்டத்தை சீரழித்தவர்களில் மிக முக்கியமானவர். அம்பிட்டியதேரரின் அடாவடித்தனங்களை ஊக்குவித்தவர். பிரதேச செயலாளரை தாக்கிவிட்டு நேரே மாவட்ட செயலகத்திற்கு வந்த அம்பிட்டிய தேரரை வரவேற்று உபசரித்து அவரின் அடாவடித்தனத்தை ஊக்கிவித்தவர் அவர் தான்.
இறுதியாக இருந்த அரசாங்க அதிபர் பத்மராசாவும் ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் தலையாட்டி பொம்மையாகவே செயற்பட்டவர்.
அரசியல் தலையீடு
கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் தலையீடுகளுக்கு இடம்கொடுக்காது மிகச்சிறப்பான நிர்வாகத்தை செய்த அரசாங்க அதிபர்களும், ஆளுமை மிக்க ஆளும் கட்சி அரசியல்வாதிகளும் இருந்திருக்கிறார்கள்.
அந்தோனிமுத்து, யோகநாதன், ஏ.கே.பத்மநாதன் என மிக நேர்மையானவர்கள் அரசாங்க அதிபர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஒரு போதும் அரசியல்வாதிகளின் கைபொம்மைகளாக செயற்பட்டதும் கிடையாது. மிக நேர்மையாக தமது கடமைகளை செய்திருக்கிறார்கள்.
அந்தோனிமுத்து அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சராக தேவநாயகம் பதவி வகித்தார். இப்போது இருக்கும் அரைகுறை அமைச்சர்களை போல் அல்ல தேவநாயகம். அவர் ஒரு சிரேஸ்ட சட்டத்தரணியாக இருந்தவர்.
சட்டபுலமையும் நிர்வாக ஆளுமையும் மிக்கவர். பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சராகவும் பின்னர் நீதி அமைச்சராகவும் இருந்தவர். தேவநாயகம் அரசாங்க அதிபர்களின் கடமைகளில் தலையிடுவது கிடையாது. எனது சிபாரிசில் தான் அரசாங்க அதிபரை நியமித்தேன் என கூறித்திரிவதும் கிடையாது. அந்தோனிமுத்து, யோகநாதன், ஏ.கே.பத்மநாதன் போன்றவர்கள் அரசியல்வாதிகளின் சிபார்சில் அரசாங்க அதிபர்களாக நியமிக்கப்பட்டவர்கள் அல்ல.
மாவட்ட செயலக நிர்வாகம்
திறமையின் அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள். அரசியல்வாதிகளுக்கு கைக்கட்டி நின்றவர்களும் அல்ல. அமைச்சர் தேவநாயகம் போன்றவர்கள் மாவட்ட செயலக நிர்வாகத்தில் தலையிட்டதும் கிடையாது. ஆனால் இப்போது அரைகுறை அமைச்சுக்களை வைத்துக்கொண்டு மாவட்ட நிர்வாகங்களில் செய்யும் தலையீடுகள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றது.
அரசியல் தலையீடுகளுக்கு இடம்கொடுக்காது நிர்வாகம் செய்த அந்தோனிமுத்து யோகநாதன் ஏ.கே.பத்மநாதன் போன்ற ஆளுமைகளை போல புதிய அரசாங்க அதிபர் செயற்படுவாரா அல்லது அவரை சுதந்திரமாக செயற்பட இந்த அரைகுறை அமைச்சர்கள் விடுவார்களா? இந்த அரைகுறைகளின் ( ஆளும் கட்சி அரசியல்வாதிகள் ) தலையீடுகளை எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |