கடமைகளை பொறுப்பேற்ற மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபர்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
அவர் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் இன்று (18.12.2023) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இவரை மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஸினி சிறிகாந்த் மற்றும் பிரதேச
செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் என பலர் வரவேற்றதோடு அதன்பின் இடம்பெற்ற மத வழிபாடுகளையடுத்து அலுவலகத்தில் தனது கடமையினை உத்தியோகபூர்வமாக
பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிய அரசாங்க அதிபரின் முன்னைய பணிகள்
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டு திருகோணமலையில் வசிக்கும் இவர் 1990 ஆம் ஆண்டில் இணைந்த வடகிழக்கு மாகாண திருகோணமலை விவசாய விரிவாக்கல் திணைக்களத்தில் பட்டதாரி பயிலுனராக இணைக்கப்பட்டார்.
1991 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையில் முதலாவது நியமனமாக, இணைந்த வடகிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
பின்னர், 2013 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையின் விசேட தரத்திற்கு உள்வாங்கப்பட்ட இவர், கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்), மாகாண சபைச் செயலாளர், மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (ஆளணி மற்றும் பயிற்சி) போன்ற செயலாளர் பதவிகளிலும் கடமையாற்றி வந்துள்ளார்.
32 வருடகாலமாக இலங்கை நிருவாக சேவையில் பல்வேறு பதவிகளில் இருந்த இவர், கடந்த 2022ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையேற்று பதவி வகித்து வந்த நிலையில், கடந்த (13.12.2023) அன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில், புதிய மாவட்ட அரசாங்க அதிபரின் குடும்பத்தினர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.