மட்டக்களப்பில் பொலிஸாரின் துப்பாக்கியை பறித்துச் செல்ல முற்பட்ட சந்தேகநபர்
மட்டக்களப்பு - ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் துப்பாக்கியை பறித்துச் செல்ல முற்பட்ட வழக்காளி ஒருவர் ஏறாவூர்ப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம் 20.04.2026 இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
நீதிமன்ற வாசலில் நின்ற சந்தேக நபர், கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் துப்பாக்கியை திடீரென பறித்துக்கொண்டு ஓடமுற்பட்ட வேளை பொதுமக்களின் உதவியுடன் மடக்கிப்பிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தையடுத்து நீதிமன்ற பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

கைதுசெய்யப்பட்ட நபர் தற்போது ஏறாவூர்ப் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த இந்த நபர் வழக்கு விசாரணையொன்றிற்காக நீதிமன்றிற்கு வருகை தந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் அண்மையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றில் சந்தேக நபராகக் கைதுசெய்யப்பட்டு வாழைச்சேனை நீதிமன்றினால் பிணை செல்ல அனுமதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.