மட்டக்களப்பை அதிரவைத்த கொலை - கொள்ளைச்சம்பவம்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று(23) நீதிபதியின் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, பிரதான சந்தேகநபர்கள் மூவரை 4 நாட்கள் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து நகைகளை வாங்கியதாகக் கூறப்படும் நகைக்கடை உரிமையாளர்கள் இருவரை எதிர்வரும் 2026 மார்ச் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிரிழந்த பெண்
கடந்த மார்ச் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடத்தப்பட்டு, அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லியடி வயல் பகுதியில் உள்ள கிணற்றில் தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அதே கிணற்றில் இதற்கு முன் இடம்பெற்ற மற்றொரு சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ரி. மேனன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விரைவான நடவடிக்கையின் மூலம் பிரதான சந்தேகநபர்கள் மூவரை உள்ளடக்கிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
மீண்டும் விசாரணை
சந்தேகநபர்கள் இன்று மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட இருந்தபோதிலும், சூழ்நிலைகளால் அது சாத்தியமாகாததால், நீதவான் அண்ணாத்துறை தர்சினியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, பொலிஸார் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிபதி, பிரதான சந்தேகநபர்கள் மூவரை 4 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.
மேலும், மற்ற இரு சந்தேகநபர்களை 2026 மார்ச் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கு எதிர்வரும் 2026 மார்ச் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam