மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 997 ஆக அதிகரிப்பு - வைத்தியர் நாகலிங்கம் மயூரன்
மட்டக்களப்பில் 14 , 16 வயதுடைய சிறுவர்கள் இருவருக்கு இன்று கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 997 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மாணவர்கள் 100 பேருக்கு நேற்று வெள்ளிக்கிழமை (23) அன்டிஜன், பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் 4 ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இரு வகுப்பறைகள் மூடப்பட்டு, 80 ஆசிரிய மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கோவிட் தொற்றுறுதி செய்யப்பட்ட ஆசிரியர் பயிற்சி மாணவர்களின் உறவினர்களான 14, 16 வயதுடைய இரு சிறுவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வியாழக்கிழமை மேற்கொண்ட பரிசோதனையில் ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.