போக்குவரத்து செய்ய முடியாத அளவிற்கு வெள்ளத்தால் சேதமடைந்துள்ள மட்டக்களப்பு வீதிக்கட்டமைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்டிருந்த பாரிய வெள்ளத்தினால் போரதீவுப்பற்று பிரதேசத்தின் ஆனைகட்டியவெளி மற்றும் பலாச்சோலை ஆகிய பகுதிகளை இணைக்கும் பிரதான வீதி முற்றாக சேதமடைந்துள்ளது.
இதனால், அப்பகுதிக்குச் செல்லும் போக்குவரத்து சேவை கடந்த 20 நாட்களாக தடைப்பட்டுள்ள காரணத்தினால், சம்பந்தப்பட்டவர்கள் வீதிக்கட்டமைப்பை புனரமைப்பு செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விடயம் குறித்து கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் கவனத்திற்கும் அப்பகுதி கிராமமட்ட பொது அமைப்புக்கள் கொண்டு சென்றுள்ளன.
உரிய அதிகாரிகளின் நடவடிக்கை
அதனையடுத்து, இராஜாங்க அமைச்சரின் ஆலேசனைக்கமைவாகவும் அவரின் பிரதிநிதியாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பூபாலபிள்ளை பிரசாந்தன் அப்பகுதிக்கு நேற்று (28.01.2024) பிற்பகல் விஜயம் செய்துள்ளார்.
தொடர்ந்து, நிலமையினை பார்வையிட்ட அவர், அந்த இடத்திலிருந்தே உரிய அதிகாரிகளுடன் தொலைபேசியில்
தொடர்பு கொண்டு வெள்ளத்தினால் பழுதடைந்துள்ள வீதியை உடன் புனரமைப்பு
செய்யுமாறு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், இதன்போது, பழுதடைந்துள்ள இந்த வீதியை உடன் புனரமைப்புச் செய்வதற்கு உரிய அதிகாரிகள்
நடவடிக்கை எடுத்துள்ளதாக பூபாலபிள்ளை பிரசாந்தன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |