பட்டலந்த விவகாரம்.. சத்தியலிங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை
பட்டலந்த அறிக்கையை விவாதிப்பது மட்டுமன்றி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (11.04.2025) நடைபெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும், "எமது நாட்டில் இடம்பெற்ற பாரதூரமான கொலைகள் தொடர்பான குற்றங்கள், நீதித்துறைக்கு விரோதமான கொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவை போன்ற பல விடயங்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த அறிக்கை 35 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் இப்போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
யுத்தக் குற்றங்கள்
இதுபோன்ற பல அறிக்கைகள் வடக்கு மற்றும் கிழக்கில் நிலவிய யுத்த காலத்தின் போதும், மக்கள் விடுதலை முன்னணியின் எழுச்சிக் காலத்தின் போதும், நடைபெற்ற மனித குலத்திற்கு எதிரான யுத்தக் குற்றங்கள் போன்ற பல விடயங்களைக் கொண்ட பல்வேறு அறிக்கைகள், பட்டலந்த அறிக்கையைப் போன்று பல வருடங்களாக ஆராயப்படாமல் களஞ்சியங்களில் இருக்கின்றன.
இவ்வாறான அறிக்கைகளை நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவந்து அவற்றை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு அதனை அப்படியே கைவிட்ட வரலாறுகள் உள்ளன. அதனால் இந்த அறிக்கையை விவாதிப்பது மட்டுமன்றி அறிக்கையில் குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிரான முறையான விசாரணைகளை நடத்த வேண்டும். அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
அவர்களைப் பொறுப்புக் கூறுபவர்களாக இருக்க வேண்டும். இந்தப் பொறுப்புக்கூறலை ஏற்படுத்துவதன் ஊடாக இவ்வாறான குற்றங்கள் மீள ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிப் பகுதியில் இதேபோன்று மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், நீதிக்கு புறம்பான கொலைகள், காணாமல் ஆக்கப்படுதல், உறவுகளால் கையளிக்கப்பட்டவர்கள் வீடு திரும்பாமை, போர்க் குற்றங்கள் போன்றவை பல அறிக்கைகளில் கொண்டுவரப்பட்டுள்ளன.
உரிய நடவடிக்கை
ஆனால், அந்த அறிக்கைகளை எடுத்து நடவடிக்கை எடுக்கும் போது நாட்டுக்காகப் போராடியவர்களைக் காட்டிக்கொடுப்பதாக இங்குள்ள அரசியல்வாதிகள் கூறுகின்றனர். எத்தனை அறிக்கைகளை நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வருகின்றோம் என்பதில் பிரச்சினையில்லை.
ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமாக இருந்திருந்தால், யுத்தத்தின் இறுதிப்பகுதியில் போர்க்குற்றங்களைச் செய்தவர்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்தோர் பயத்திலேயே அதைச் செய்திருக்க மாட்டார்கள்.
எவ்வாறாயினும் அறிக்கைகளில் உள்ள முடிவுரைகளுக்கமைய சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதன் ஊடாக நாட்டில் இவ்வாறான குற்றங்கள் மீள நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது.
நாங்கள் அரசியல் காரணங்களுக்காக மட்டும் இந்த அறிக்கைகளைப் புரட்டாமல், இந்த நாடு ஒரு அமைதியான எல்லா மக்களும் வாழக் கூடிய நாடாக மாற வேண்டுமாக இருந்தால் இந்த ஆணைக்குழு அறிக்கையில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த இந்த அரசாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |