பட்டலந்த வதை முகாம்: மேலும் ஒரு அதிர்ச்சி தரும் சாட்சியம்
இணைப்புகள் மற்றும் குறிப்புகள் உட்பட 14,000 பக்கங்களைக் கொண்ட பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையில், இலங்கைக்கு மற்றும் உலகத்துக்கு மறைக்கப்பட்ட ஏராளமான விபரங்கள் உள்ளடங்கியுள்ளன.
அந்த வகையில் பட்டலந்த சித்திரவதை முகாம் நடவடிக்கைகளின் போது, இலங்கையின் பொலிஸ் மா அதிபராக பணியாற்றிய எர்னஸ்ட் பெரேரா ஆணைக்குழுவின் முன் அளித்த சாட்சியங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
1988 ஒகஸ்ட் 25ஆம் திகதியன்று, சட்டத்தரணி விஜயதாச லியனாராச்சி காணாமல் போன போது, எர்னஸ்ட் பெரேராவே பொலிஸ் மா அதிபராக செயற்பட்டார்.
தொலைபேசி அழைப்பு
இந்தநிலையில், காணாமல் போன சட்டத்தரணி, தங்காலை பொலிஸ் கண்காணிப்பில் இருப்பதாக தங்காலை பொலிஸ் அதிகாரி கரவிடிகே தர்மதாச தம்மிடம் கூறியதாக, எர்னஸ்ட் பெரேரா ஆணைக்குழுவிடம் குறிப்பிட்டுள்ளார்.
எர்னஸ்ட் பெரேராவின் சாட்சியத்தின்படி, 1988 ஒகஸ்ட் 31ஆம் திகதியன்று நண்பகலில், அப்போதைய அமைச்சர் ரணில் விக்ரமசிங்க அவருக்கு தொலைபேசியில் உரையாடியாடியுள்ளார்.
அன்றைய தினம் நண்பகலில், சந்தேக நபரை களனியில் உள்ள சிறப்பு நடவடிக்கைப் பிரிவுக்கு அழைத்து வருமாறு ரணில் விக்ரமசிங்க தமக்கு அறிவுறுத்தியதாக எர்னஸ்ட் பெரேரா குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க, தம்மை தொலைபேசியில் அழைத்து, சந்தேக நபரை களனி பிரிவில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், இது குறித்து ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு செயலாளருக்கு அறிவிப்பார் என்று தாம் கருதியதாகவும் எர்னஸ்ட் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
டக்ளஸ் பீரிஸ்
ஆணைக்குழு அறிக்கையின் படி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் எர்னஸ்ட் பெரேரா, சந்தேகநபரான சட்டத்தரணி விஜயதாச லியனாராச்சியை பட்டலந்த வீட்டு வளாகத்தில் வசித்து வந்த உதவி பொலிஸ் மா அதிபர் டக்ளஸ் பீரிஸிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து 1988 செப்டம்பர் 2 ஆம் திகதியன்று இரவு 11 மணிக்கு, கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் லியனாராச்சி ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அடுத்த நாள் அதிகாலை 12:55 மணிக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவர் காலமானார். பிரேத பரிசோதனையை கொழும்பு சட்டத்துறை மருத்துவ அதிகாரி எல்.பி. டி அல்விஸ் நடத்தினார்.
அவரது கண்டுபிடிப்புகளின் படி, மழுங்கிய ஆயுதங்களின் தாக்குதல்களால் ஏற்பட்ட தசை மற்றும் எலும்புக்கூடு காயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் இரத்தக்கசிவு காரணமாக விஜயதாச லியனாராச்சி இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
