பசிலின் சர்ச்சைக்குரிய வீட்டில் தொடரும் சிக்கல் - ஆபத்தான கூடாரமாக மாறும் வீடு
மாத்தறை பிரௌன்ஸில் பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் தென்னந்தோட்டத்தில், அரைவாசி கட்டப்பட்டு கைவிடப்பட்டுள்ள கட்டடம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் கூடாரமாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த கட்டடம் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவினால் முறையற்ற விதத்தில் ஈட்டப்பட்ட பணத்தை பயன்படுத்தி கொள்வனவு செய்ததாக சந்தேகிக்கப்படுகின்றது.
இந்தக் காணியை கொள்வனவு செய்தது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
நிர்மாணப் பணிகள்
விசாரணையில் இருக்கும் போதே, வழக்கறிஞரின் தலையீட்டுடன் இக்கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த காணியை கொள்வனவு செய்தது தொடர்பில் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குக்கு பல சந்தர்ப்பங்களில் பசில் ராஜபக்ச முன்னிலையாக தவறியுள்ளார்.
இதன் காரணமாக, பசில் ராஜபக்சவின் பிணைப் பணத்தை பறிமுதல் செய்யவும், அவரது பிணைதாரிகளிடம் இருந்து பிணைப் பணத்தை அறவிட்டுக்கொள்ளவும் மாத்தறை பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன், பசில் ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி வரை நீடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்குக்கு தொடர்புடைய காணியில் கட்டப்பட்டுள்ள வீடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அதற்குள் சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்று வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அங்கு வெற்று மதுபானப் போத்தல்கள், தீப்பெட்டிகள், லைட்டர்கள், படுக்கை விரிப்புகள், ஊசிகள் மற்றும் ஊசி செலுத்தும் உபகரணங்களும் ஆங்காங்கே காணக்கூடியதாக இருந்தன.
சட்டவிரோத நடவடிக்கை
இந்தக் கட்டடத்தைப் பல்வேறு குழுக்கள் அல்லது நபர்கள் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதாக சந்தேகிக்கப்படுகின்றது.
ஆரம்பக் கட்டத்தில் 2 அல்லது 3 மாடிக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக பாரிய தடிமன்கொண்ட கம்பிகளையிட்ட தூண்களின் மீது நிர்மாணப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
பின்னர் அவசரமாக அதன் மீது சுவர்கள் எழுப்பப்பட்டு, பூச்சு பூசப்பட்டு, கூரை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

9 கொள்கலன் பெட்டிகளில் கட்டடப் பொருட்கள் இவற்றுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் அவ்வப்போது நிர்மாணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த காணி ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஹெர்பெட் கெல்லர் என்பவருக்குச் சொந்தமாக இருந்தது. இதன்போது, அவருக்கு 60 மில்லியன் ரூபா பணத்தைச் செலுத்தி அந்த காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணியைக் கொள்வனவு செய்வதற்காக செலுத்தப்பட்ட பணம் முறையற்ற விதத்தில் ஈட்டப்பட்டுள்ளது. இதனால், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பசில் இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபர் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening