அடுத்த 8 வருடங்களை குறிவைத்துள்ள அநுர! தொடரப்போகும் அதிரடி கைதுகள்
பொதுச் சொத்துக்களை கொள்ளையடித்துவிட்டு, உலகின் எந்த நாட்டிலும் மறைந்து வாழ முடியும் என்று எவரும் நினைக்கக் கூடாது. அப்படியானவர்களை எப்படியாவது நாட்டுக்குக் கொண்டு வருவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிக்கவரெட்டிய பகுதியில்(12.10.2026) நேற்றையதினம் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
திருடர்களைக் கைது செய்வதில் எவ்விதமான வரைமுறையில் இல்லை. எமது ஆட்சியின் எஞ்சி 3 ஆண்டுகளிலும், அடுத்த ஆட்சிக் காலத்திலும் திருடர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும்.
சட்ட நடவடிக்கைகள்
தற்போது, திருடர்களை கைது செய்வதில் வரைமுறை இருக்க வேண்டும் என சிலர் கருத்து வெளியிடுகின்றனர். திருடும்போது அவர்களுக்கு எந்த வரைமுறையும் இருக்கவில்லை என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
சில விசாரணைகள் மிகவும் சிக்கலானவை. சில விசாரணைகளுடன் பல்வேறு நாடுகளும் தொடர்புபட்டுள்ளன. சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, டென்மார்க், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிடம் சில விசாரணைகளுக்குத் தகவல்களைக் கோரியுள்ளோம். இந்த விடயங்களில் சர்வதேச அளவிலான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிலர் நாட்டை விட்டு வெளியேறித் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள தூதரகங்களுடனும் நாம் தொடர்பில் இருக்கின்றோம்.
இலங்கை மக்களது சொத்துக்களை கொள்ளையடித்துவிட்டு, உலகின் எந்த நாட்டிலும் மறைந்து வாழ முடியும் என்று எவரும் நினைக்கக் கூடாது. எப்படியாவது அவர்களை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வருவோம்.
இதற்கான சட்ட நடைமுறைகள் உள்ளன. குற்றப் பத்திரிகைகளைத் தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர வேண்டும். அதன் பின்னரே சம்பந்தப்பட்டவர்களை நாடு கடத்துவதற்கான கோரிக்கைகளை நாம் முன்வைக்க முடியும்.

நாம் கேட்டவுடன், வேறு நாடுகள் அவர்களை ஒப்படைத்துவிட மாட்டாது. சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குகள் உள்ளனவா என்பதையும், தேவையான சட்ட ஆவணங்களையும் அவை கோரும். சில வழக்குகள், விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளன.
அந்த வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் உலகின் எந்தப் பகுதியில் மறைந்திருந்தாலும், சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் சட்ட நடைமுறைகளின் ஊடாக அவர்களை நாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம்.
அதற்கு சில காலம் தேவைப்படும். அதனால்தான், எஞ்சியுள்ள மூன்று ஆண்டுகளிலும் இந்த நடவடிக்கை தொடரும் என்றும், அடுத்த ஆட்சிக் காலத்திலும் தொடரும் என்றும் கூறுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri