மொட்டு கட்சியிலிருந்து விலகியவர்களை வளைத்துப்போட பசில் தீவிர முயற்சி!
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியிலிருந்து சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்கள் சிலரை மீண்டும் கட்சியில் இணைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவின் வழிகாட்டலுடன் இதற்கான நகர்வுகள் இடம்பெறுகின்றன.
சுயேச்சையாக செயற்படும் குழு
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து சுயேச்சையாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் அடுத்த வாரமும் பல கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன என்று அக்கட்சியின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் கட்டளை சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரத்தில் மூன்றில் இரண்டு பங்கு கட்சிக்கு தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அறிய முடிகின்றது.
பொது செயலாளரின் கருத்து
இந்த விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிிக்கையில், “சதிகாரர்களிடம் சிக்கியுள்ள தமது கட்சியின் குழுவொன்று எதிர்காலத்தில் நிச்சயமாக பொதுஜன முன்னணியில் இணையும்.
எதிர்வரும் தேர்தலில் கட்சியின் பலத்தை காட்டுவதற்கு ஏற்கனவே பல வியூகங்கள்
தெரிவு செய்யப்பட்டுள்ளன என்றும், அந்த தேர்தலில் தமது கட்சி
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை நிச்சயமாக பெற்றுக்கொள்ளும்”என்று கூறியுள்ளார்.