இலங்கை அரசியலில் பசில் தொடர்ந்து ஒரு சக்தியாக இருப்பார்!
நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும், இலங்கை அரசியலில் பசில் ராஜபக்ச தொடர்ந்து ஒரு சக்தியாக இருப்பார்" என்று கொழும்பு சிந்தனைப் பகுப்பாய்வு மையத்தின் மூத்த ஆய்வாளர் பவானி பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மீது அவருக்கு எந்தளவு செல்வாக்கு அல்லது கட்டுப்பாடுகள் உள்ளன என்பதே தற்பொதைய கேள்வியாகும் என பவானி பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள பின்னணியில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் வலுத்துள்ளது. இந்நிலையில், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார்.
அரசியலில் இருந்து என்னால் விலக முடியாது
"இன்று முதல் நான் எந்த அரசாங்க நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டேன், ஆனால் என்னால் அரசியலில் இருந்து விலக முடியாது" என்று பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்ச, பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டங்கள் வன்முறையாக மாறியதை அடுத்து, கடந்த மாதம் 9ம் திகதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். எனினும், அவர் தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுகின்றார்.
மூன்று ராஜபக்ச சகோதரர்களும் பல தசாப்தங்களாக இலங்கை அரசியலில் முக்கிய பங்கு வகிக்கின்றனர், எனினும், நாட்டின் பொருளாதாரத்தை தவறாக கையாண்டதற்காக ஆயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி போராடுகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள குழப்பத்தில் ராஜபக்ச சகோதரர்களுக்கு இடையிலான உட்கட்சி பூசல்களும் பங்கு வகிக்கின்றன.
பொதுஜன பெரமுனவை சார்ந்திருக்கும் ரணில்
22 மில்லியன் மக்களைக் கொண்ட நாடு, 7 தசாப்தங்களில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது, எரிபொருள், மருந்துகள் மற்றும் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறை இறக்குமதி ஸ்தம்பித்துள்ளது.
இலங்கையின் புதிய பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க இப்போது நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வழியைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) கடன் திட்டம் மற்றும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஆதரவுக்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், ஒரே ஒரு நாடாளுமன்ற ஆசனத்துடன், விக்ரமசிங்க ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியைச் சார்ந்து இருக்கிறார், இது பசில் ராஜபக்ச ஒரு அரசியல் சக்தியாக மீண்டும் கட்டியெழுப்ப உதவும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே, நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும், இலங்கை அரசியலில் பசில் ராஜபக்ச தொடர்ந்து ஒரு சக்தியாக இருப்பார்" என்று கொழும்பு சிந்தனைப் பகுப்பாய்வு மையத்தின் மூத்த ஆய்வாளர் பவானி பொன்சேகா கூறியுள்ளார்.