பசில் ராஜபக்சவுக்கு பிறப்பிக்கப்பட்ட சர்வதேச சிவப்பு பிடியாணை! அமெரிக்காவிலும் சிக்கல்
சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு திரும்பக்கொண்டுவர சர்வதேச நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை பொலிஸ் இது குறித்து சர்வதேச பொலிஸார்( இன்டர்போலுக்கும்) தகவல் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வேறு நாட்டிற்கும் பயணிக்க தடை
பசில் ராஜபக்ச சிவப்புப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் எந்தவொரு காரணத்திற்காகவும் அமெரிக்காவிலிருந்து வேறு எந்த நாட்டிற்கும் பயணிக்க முடியாது என்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
அமெரிக்க குடிமகனான பசில் ராஜபக்சவை இலங்கைக்கு கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டால், ஒப்படைப்பு ஒப்பந்தங்களின்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், பசில் ராஜபக்சவை இலங்கைக்குத் திரும்பக் கொண்டுவர அமெரிக்க நீதிமன்றங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் நிதியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், நிதி பயன்பாடு தொடர்பான வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.