ரணிலிடம் மதுபான உரிமங்களை பெற்றதாக கூறப்படுவோர் குறித்த தகவல்கள்
இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் வழங்கப்பட்ட மதுபான உரிமங்களின் விபரங்களை அரசாங்கம் அண்மையில் வெளிப்படுத்தியது.
கடந்த ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அரசாங்கம், எதிர்க்கட்சி உறுப்பினர்களை தம்வசப்படுத்துவதற்காக, இத்தகைய உரிமங்களை அரசியல் இலஞ்சமாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையிலேயே, இந்த விபரங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
இதன்படி ஜனவரி 1 முதல் ஒக்டோபர் 14 வரை வழங்கப்பட்ட 361 மதுபான உரிமங்களில், 172 மதுபான உரிமங்கள், சில்லறை விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பரிந்துரை
இந்தநிலையில், குறித்த பட்டியலில் சில பெயர்கள் உடனடியாகத் தெரிய வந்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறியுள்ளது.
உதாரணமாக, புத்தளம் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட ஆறு மதுபான அனுமதிப்பத்திரங்களில் ஒன்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த மதுபான உரிமங்களை வழங்க பரிந்துரைத்தவர்களின் பெயர்கள் அட்டவணைப்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மதுபான உரிமம் வழங்க பரிந்துரை செய்து, மதுவரித்திணைக்களத்துக்கு கடிதம் கொடுப்பது வழக்கமான விடயமாகும்.
எனினும், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பெயர்களை முன்வைத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்த உரிமங்களை பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிவுகள் விரைவில் வெளியாகும் என்றும் அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மறு அறிவித்தல் வரை புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை நிறுத்துமாறு ஜனாதிபதியும் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |