மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் கவன ஈர்ப்பு போராட்டம்: விடுக்கப்பட்ட கோரிக்கை (Photos)
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையானது நாட்டில் நீதிக்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான அச்சுறுத்தல் நிலையாக கருதப்படும் நிலையில், இரு வாரங்களுக்குள் விசாரணை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று (03.10.2023) மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கே.பிரேம்நாத் தலைமையில் பணிப் புறக்கணிப்பும் கவனஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளிலுமிருந்து விலகி
சட்டத்தரணிகள் இன்றைய தினம் பணி புறக்கணிப்பினை முன்னெடுத்ததுடன் மட்டக்களப்பு
நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கவன ஈர்ப்பு போராட்டம்
நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் ஊர்வலமாக சென்று மீண்டும் கட்டிட தொகுதிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட சட்டத்தரணிகள் ‘பாரபட்சமற்ற விசாரணை வேண்டும், நீதித்துறையில் அரசியல் தலையீடு வேண்டாம், நீதித்துறையினை அச்சுறுத்தாதே, நீதித்துறை சுதந்திரத்திற்காய் குரல் கொடுப்போம், சட்டத்தின் முன்யாவரும் சமம்” போன்ற பல்வேறு சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிபதி சரவணராஜாவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையானது முழு நாட்டினது
நீதித்துறைக்கு பாரிய அச்சுறுத்தலையும் அழுத்ததினையும் ஏற்படுத்தியுள்ளது என
மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி
கே.பிரேம்நாத் தெரிவித்தார்.
பாரபட்சமற்ற விசாரணை
இந்த நிலைமையானது இன்று தமிழ் பிரதேசத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் இந்த நிலைமையான முழு நாட்டிலும் ஏற்படக்கூடிய சூழ்நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கான பாரபட்சமற்ற விசாரணையொன்று உடனடியாக நடாத்தப்பட்டு காலம் தாழ்த்தாமல் உடனடியாக வெளியிடப்படவேண்டும்.
இவ்வாறான அச்சுறுத்தல்கள் இனிவரும் காலங்களிலும் இடம்பெறக்கூடாது என்பதுடன் இவ்வாறான அச்சுறுத்தல் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |