வடக்கு - கிழக்கு சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு! பெருகும் ஆதரவு (Photos)
மன்னார்
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும் சட்டத்துறையிலும் நீதித்துறையிலும் இடம்பெறும் அத்துமீறல்களை நிறுத்தக் கோரியும் மன்னார் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த போராட்டம் இன்றையதினம் (03.10.2023) செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளது.
அதே நேரம் முல்லைத்தீவில் இடம் பெற்று வரும் போராட்டத்திலும் கலந்து கொண்டு நீதிபதி சரவணராஜவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் போராட்டத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.
இன்று மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் எந்த ஒரு நீதிமன்றத்திலும் முன்னிலையாகவில்லை என்பதுடன் வழக்குகளுக்காக சமூகளித்த பொதுமக்களும் பல்வேறு பாதிப்புக்களை எதிர் கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் இன்றையதினம் (03.10.2023) பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
இதனால் யாழ்ப்பாண நீதிமன்ற வளாக செயற்பாடுகளும் முற்றாக முடங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைதீவு நீதிபதியாக இருந்த ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தம் காரணமாக பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறி சென்றுள்ள நிலையில், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது.
நீதிபதிக்கு ஏற்பட்ட அச்சுறுத்த தொடர்பில் பாரபட்சமற்ற உரிய சுயாதீன விசாரணை செய்யப்பட வேண்டும்.
எச்சந்தர்ப்பத்துலும் நீதித்துறை சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சட்டத்தரணிகள் வலியுறுத்தினர்.
சாவகச்சேரி
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு யாழ்.சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகளும் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பணிப் புறக்கணிப்பு காரணமாக வழக்கு விசாரணைகள் இடம்பெறவில்லை எனவும் வழக்குகள் தவணையிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக செய்திகள்: பிரதீபன்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம் முல்லத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிகோரி நீதிமன்ற பணிபுறக்கணிப்புடன் நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்னால் இன்று கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் நீதிதுறை சுதந்திரத்துக்காய் குரல் கொடுப்போம்,சட்டத்தின் முன் யாவரும் சமம், நீதிதுறையை அச்சுறுத்தாதே, பாரபட்சமற்ற விசாரணை வேண்டும், சுதந்திரத்தில் தலையிடாதே போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை. மாவட்ட நீதிமன்றம் ஏறாவூர் சுற்றுவா நீதிமன்றமு;.களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றம், மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள உயர்நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் நீதவான் நீதிமன்றம், தொழிலாளர் நியாயசபை நீதிமன்றம் உட்பட 8 நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பால் அனைத்து நீதிமன்றங்கள்; இன்று செயலிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி-குமார்
முல்லைத்தீவு
முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று (02) ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று (03.0.2023) இரண்டாவது நாளாக தொடர்கிறது.
நீதி துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைகளும் உறுதி செய்யப்படும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் மேற்கொண்டதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த. பரஞ்சோதி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு
அதற்கமைய நேற்று (02) ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று (03.10.2023) இரண்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
மேலதிக செய்திகள்: பாலநாதன் சதீஸ்
திருகோணமலை
முல்லைத் தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் நீதித்துறை சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று (03.0.2023) திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இதனை திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.
நாட்டில் நீதி சுதந்திரம்
நீதி தூறையை சுயமாக இயங்கவிடு, சட்ட ஆட்சியை நிலை நிறுத்து உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கவனயீர்ப்பில் சட்டத்தரணிகள் ஈடுபட்டனர்.
நாட்டில் நீதி சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் நீதிபதி அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதால் நீதியை நிலை நாட்ட முடியாமல் போகும் எனவும் கவனயீர்ப்பில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
இதில் பல சட்டத்தரணிகள் கலந்து கொண்டு தங்களது நியாயமான கோரிக்கைகளை இதன்போது முன்வைத்திருந்தனர்.
மேலதிக செய்திகள்: கஸ்பர்