இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் வலியுறுத்தியுள்ள விடயம்
இரண்டு நாட்களுக்குள் இரண்டு இளைஞர்கள் இலங்கையில் வழக்கு விசாரணைகள் இன்றி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது பொலிஸாரின் கடமையென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமது காவலில் இருப்பவர்களைப் பாதுகாப்பது பொலிஸ் மற்றும் அரசாங்கத்தின் கடமை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பொலிஸ்மா அதிபருக்கு வலியுறுத்தியுள்ளார்.
மெலோன் மாபுலா அல்லது ‘உரு ஜுவா’ மற்றும் தாரக பெரேரா விஜசேகர அல்லது ‘கொஸ்கொட தாரக’ ஆகியோர் கடந்த இரு நாட்களில் கொல்லப்பட்டதை அந்த சங்கம் கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.
காவலில் இருந்து இரண்டு சந்தேகநபர்கள் படுகொலை செய்த விடயத்தை கடுமையாக கண்டிப்பதாக, சட்டத்தரணிகள் சங்கத்தி தலைவர், ஜனாதிபதியின் சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் செயலாளர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரி ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணங்கள் நீதித்துறைக்கு புறம்பான கொலைகளின் அனைத்து அடையாளங்களையும் கொண்டிருப்பதால் காவலில் உள்ள நபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அந்த சங்கம் அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தாரக பெரேரா விஜசேகர தகுற்றவியல் புலனாய்வுத் துறையின் காவலில் இருந்து திடீரென பேலியகொட உள்ள ஒரு சிறப்பு பொலிஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும், அவர் காவலில் கொல்லப்படுவார் என அவர் அஞ்சுவதாகவும் கடந்த 12ஆம் திகதி, தாரக பெரேரா விஜசேகரவை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தார்.
சம்பந்தப்பட்ட சட்டத்தரணி அனோஜ் ஹெட்டியாரச்சி தனது கவலைகள் குறித்து பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வுப் பணிப்பாளர் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் தெரிவித்திருந்தார்.
சட்டத்தரணியின் முறைப்பாட்டை அடுத்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அன்றைய தினம் இரவு, பொலிஸ்மா அதிபருக்கு இதுத் தொடர்பில் அறிவுறுத்தியதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்திற்கு ஒரு பொறுப்பு என்பதை உச்ச நீதிமன்றம் பலமுறை பொலிஸ் மா அதிபருக்கு வலியுறுத்தியுள்ளதக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேலியகொட விசேட குற்றப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபருடன் ஆயுதங்களைத் தேடும் போது சந்தேகநபர் பொலிஸாரை தாக்க முயன்றபோது கொல்லப்பட்டதாக பொலிஸாரை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
சந்தேகநபரின் பாதுகாப்பு குறித்து பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மே 11ஆம் திகதி மற்றொரு சந்தேகநபரான மெலோன் மாபுலா அல்லது ‘உரு ஜுவா’ உயிரிழந்திருந்தார். எனினும் அவர் உயிரிழப்பதற்கு முன்னதாக அவரது சட்டத்தரணி அவரை சந்திக்க முயற்சித்திருந்தார். மெலோன் மாபுலாவின் சட்டத்தரணி ஹரிஷ்க சமரநாயக்க அன்று இரவு நவகமுவ பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்தார்.
எனினும், மெலோன் மாபுலா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் விசாரணைக்கு என வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக, அங்கிருந்த உப பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய மரணங்கள் சட்ட விதிக்கு முரணானது எனவும், இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் எனவும் அந்த சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மெலோன் மாபுலாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என, கைதிகளின் உரிமைகளைப்
பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா, பொலிஸ் காவலில்
வைக்கப்பட்டவர்கள் குறித்த தமது அனுபவங்களின் அடிப்படையில் சமூக ஊடகங்களில்
எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

