வர்த்தக வங்கிகளின் வட்டி வீதங்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்
வர்த்தக வங்கிகளில் கடன் வட்டி வீதங்கள் குறைக்கப்படவில்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை மத்திய வங்கியானது தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக கொள்கை வட்டி வீதத்தை குறைத்துள்ளது.
வர்த்தக வங்கிகளின் கடன் வட்டி வீதங்கள்
இருந்த போதிலும் ஒப்பீட்டளவில் பார்க்கும் போது வர்த்தக வங்கிகளில் கடன் வட்டி வீதங்கள் குறைக்கப்படவில்லை. இது பொருளாதாரத்தின் மீட்சிக்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் வங்கி வட்டி வீதங்களை நியாயமான முறையில் குறைக்கவும், கடன் வழங்குவது தொடர்பான நிபந்தனைகளை தளர்த்தவும் வங்கி மற்றும் நிதித்துறை செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
என்ற போதும் மத்திய வங்கியானது கொள்கை வட்டி வீதங்களை குறைத்துள்ள நிலையில், வட்டிகளை குறைக்காத வங்கிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மேலும், “மத்திய வங்கியின் கொள்கை வட்டிவீதங்கள் குறைக்கப்பட்டுள்ளமைக்கு அமைவாக, அரச மற்றும் வர்த்தக வங்கிகள், நிதி நிறுவனங்களும் தமது வட்டி வீதங்களை குறைக்க வேண்டும்.
அவ்வாறு வட்டி வீதங்கள் குறைக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும்” என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவும் எச்சரிக்கை விடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |