கனடாவிலுள்ள மக்கள் சிலரின் வங்கிக் கணக்குகளுக்கு திடீரென வந்த பணம்
கனடாவில் ஆல்பர்ட்டா, சஸ்காச்சுவான், மனித்தோபா மற்றும் ஒன்ராறியோ மாகாணங்களில் மக்களுக்கு திடீரென வங்கிக் கணக்குகளில் பணத்தொகை வைப்பிலிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கையிலேயே பெடரல் அரசாங்கம் பருவநிலை நடவடிக்கை ஊக்கத்தொகையின் ஒரு தவணையை மக்களுடைய வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு முதலான எரிபொருட்களைப் பயன்படுத்தும் போது அதற்கு ஒரு வரி விதிக்கப்படுகிறது.
நேரடியாக பணம் செலுத்தும் திட்டம்
கார்பன் வரி திட்டம் என்னும் அரசின் இந்த திட்டத்தால் மக்களுக்கு ஏற்படும் செலவைக் கொஞ்சம் குறைக்கும் நோக்கில்தான், மக்களுடைய வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கனடாவின் மற்ற மாகாணங்களில் நேரடியாக மக்களுடைய வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படுவதற்கு பதிலாக அது மாகாண அரசாங்கங்களிடம் கையளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு, பருவநிலை நடவடிக்கை ஊக்கத்தொகை நான்கு தவணைகளாக அளிக்கப்படும். குடும்பம் ஒன்றுக்கு அவர்கள் வாழும் மாகாணத்தைப் பொருத்து தொகையொன்று அவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
செலுத்தப்படும் பணம்
அதன்படி ஆல்பர்ட்டா மாகாணத்திற்கு 1,079 டொலர்களும், சஸ்காச்சுவான் மாகாணத்திற்கு 1,101 டொலர்களும், மனித்தோபா மாகாணத்திற்கு 832 டொலர்களும், ஒன்ராறியோ மாகாணத்திற்கு 745 டொலர்களும் செலுத்தப்படும்.
இதுபோக, சிறிய மற்றும் கிராமப்புற பகுதிகளில் வாழும் சமூகத்தினருக்கு 10 சதவீத தொகை கூடுதலாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.