மீண்டும் இலங்கைக்கு கடன் கொடுக்க வெளிநாடுகள் தயார் இல்லை? கடன் பொறியில் சிக்கியது எப்படி?
அந்நியச் செலாவணியின் விலையையும், அளவையும் கட்டுப்படுத்த முயற்சித்தால் மட்டுமே ஒரு நாட்டில் அந்நியச் செலாவணி பற்றாக்குறை ஏற்படும்.
இதை அறியாதமை காரணமாகவே இலங்கை அரசாங்கம் கடனில் சிக்கியுள்ளதாக டாக்கா ட்ரிப்புன் தளம் தெரிவித்துள்ளது.
எனவே இதனைக்கண்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்று டாக்கா ட்ரிப்புன் தளத்தில் கருத்தை வெளியிட்டுள்ள லண்டன் அடம்ஸ் ஸ்மித் நிறுவகத்தின் சிரேஸ்ட பொருளியல் நிபுணர் டிம் வோர்ஸ்டால் (Tim Worstall) தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் சர்வதேசப் பொருளாதாரம் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து இலங்கை அரசாங்கத்தின் அறிவின்மை புலனாகிறது. இலங்கை அரசாங்கம், திருப்பிச் செலுத்துவதை விட அளவுக்கு அதிகமாகக் கடனை பெற்றுள்ளது.
எனவே கடனை கொடுப்பவர்கள், இன்னும் அதிகமாகக் கடன் கொடுக்கத் தயாராக இல்லை என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம் அல்ல. உள்நாட்டுப் பொருளாதாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி இலங்கை அரசாங்கத்தின் அறிவின்மையை காணமுடிகிறது.
உதாரணமாக, ஒட்டுமொத்த நாட்டின் விவசாயத் துறையும் இயற்கையாகவே செல்ல வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் முடிவு செய்தது. எனினும் அதனை வரையறுக்கப்பட்ட நிலத்தை பயன்படுத்தி மேற்கொள்ளும் போது உணவு உற்பத்தி குறைவாகவே இருக்கும் என்பதில் ஆச்சரியப்படமுடியாது.
இந்த விடயத்தில் உரமும் நிலமும் ஒன்றுக்கொன்று மாற்று என்பதை இலங்கை அரசாங்கம் உணரவில்லை. உரத்தை குறைவாகப் பயன்படுத்தும்போது அதிக நிலம் இல்லை என்றால், அங்கு உணவு உற்பத்தி குறைவாகவே இருக்கும்.
இதேவேளை இலங்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்துவது கடன் தர மதிப்பீட்டு முகவர்களல்ல. மாறாக இலங்கை அரசாங்கம் தனது சொந்த பொருளாதாரக் கொள்கைகளின் மூலம் அனைத்தையும் செய்து வருகிறது என்று டிம் வோர்ஸ்டால் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் ஒருவரின் தவறுகளைக் குறிப்பிடும் மற்றொருவரைப் பற்றி முறைப்பாடு செய்வது சிறந்ததல்ல. எனினும் அதனையே இலங்கை செய்து வருகிறது என்று டிம் வோர்ஸ்டால் (Tim Worstall) குறிப்பிட்டுள்ளார்.
