பங்களாதேஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்க இடைநீக்கம்
பங்களாதேஸ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சந்திக ஹதுருசிங்க, ஒழுக்காற்று அடிப்படையில் பங்களாதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் 48 மணி நேரத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், அதன் பின்னர் அவர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் பில் சிம்மன்ஸ் 2025 - செம்பியன்ஸ் கிண்ணம் வரை பங்களாதேஸ் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்பார்.
புதிய நியமனம்
ஹத்துருசிங்க கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் பங்களாதேஸ் பயிற்சியாளராக இரண்டாவது முறையாக பதவியில் அமர்த்தப்பட்டார். இது, அணியின் முன்னாள் தலைவர்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக தற்போதைய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைவர் ஃபரூக் அகமதுவும், ஹத்துருசிங்கவின் நியமனத்தை எதிர்த்தார்.
ஹதுருசிங்கவின் கீழ், பங்களாதேஸ் அணி, கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணம் மற்றும் இந்த ஆண்டு 20க்கு20 உலகக் கிண்ண போட்டிகளின்போது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக பங்களாதேஸ் அணி, 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றமை அவரது சிறந்த சாதனையாக கருதப்பட்டது, பாகிஸ்தானில் இது பங்களாதேஸின் முதல் தொடர் வெற்றியாகும், அத்துடன் 15 ஆண்டுகளில் முதல் வெளிநாட்டு டெஸ்ட் தொடர் வெற்றியாகவும் அது அமைந்தது.
இருப்பினும், அதைத் தொடர்ந்து நடந்த இந்திய சுற்றுப்பயணத்தில், அவர்கள் டெஸ்டில் 2-0 மற்றும் 20க்கு20 போட்டிகளில் 3-0 என தோல்வியடைந்தனர். அதிலும் மூன்றாவது போட்டியில் சாதனை தோல்வியும் அடங்கும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |