பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் மீது கொலை குற்றச்சாட்டு முன்வைப்பு..!
பங்களாதேஷ் அவாமி லீக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரருமான ஷகிப் அல் ஹசன் (Shakib Al Hasan )மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் (Bangladesh) அரசுக்கு எதிராக கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி நடந்த போராட்டத்தில் ரபிகுல் இஸ்லாம் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் மீது இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு அடாபூர் பொலிஸ் நிலையத்தில் நடந்து வருவதோடு, இந்தக் கொலை வழக்கில் சுமார் 150க்கு மேற்பட்ட நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஷகிப் அல் ஹசன் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இதில் முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பங்களாதேஷ் கிரிக்கெட் அமைப்பின் முன்னாள் தலைவர் நஜ்முல் ஹுசைன் என பல முக்கிய நபர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
தற்போது 37 வயதாகும் ஷகிப் அல் ஹசன் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் மூத்த வீரராக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.