வெளிநாடொன்றில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த அதிரடித் தடை
ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசாங்கத்தின் கீழ் பணிபுரியும் சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகள் அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு நாடு தழுவிய ரீதியில் அதிரடித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தலிபான்களின் இராணுவ நீதிமன்றம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, நீதிபதிகள் உள்ளடங்கலாக இராணுவம் மற்றும் சிவில் நிறுவனங்களைச் சேர்ந்த அனைத்து மட்டத்திலான அதிகாரிகளும் கடந்த ஜூன் 16ஆம் திகதி முதல் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
தடை உத்தரவு
இந்த உத்தரவை மீறி எவரேனும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தினால், அவை உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டு பொதுவெளியில் சுக்குநூறாக உடைக்கப்படும் என்றும், அத்தோடு சம்பந்தப்பட்ட நபர்களுக்குச் சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அந்த உத்தரவில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை உத்தரவு ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ளதால், ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் அன்றாட நிர்வாகச் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான உத்தியோகபூர்வ பணிகள், தகவல்தொடர்புகள், மின்னஞ்சல் மற்றும் வட்ஸ்அப் மூலமாகவே இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்டு வந்ததால், இந்தத் தடையின் காரணமாகப் பல நிர்வாகச் செயல்முறைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தீவிர நடவடிக்கை
குறிப்பாகப் பஞ்ஷீர் மாகாண ஆளுநர் தனது எல்லைக்குட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இந்தத் தடையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
மறுபுறம், தலிபான்களின் இந்தத் தீவிர நடவடிக்கை குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது பலத்த விசனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

கல்வி கற்பதற்கும், நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களைப் பதிவு செய்வதற்கும், தணிக்கை செய்யப்படாத உண்மைத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் ஆப்கான் மக்களுக்கு எஞ்சியிருக்கும் மிகச் சில ஊடகங்களில் ஸ்மார்ட்போன்களும் முதன்மையானவை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்வி, ஊடக சுதந்திரம் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் தடையானது மக்களின் தகவல் அறியும் உரிமையையும், தகவல்தொடர்புச் சுதந்திரத்தையும் மேலும் முடக்கும் மற்றொரு அபாயகரமான நகர்வு என மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.