சீரற்ற காலநிலை! கடற்றொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக புத்தளம் தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீவைச் சுற்றியுள்ள மோசமான காலநிலை ஓரளவுக்கு தணிந்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.
எவ்வாறாயினும், புத்தளம் தொடக்கம் பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த காற்று வீசுவதுடன் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படுவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
காலநிலை அறிக்கை
புத்தளம், ஹலவத்தை, நீர்கொழும்பு, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையான கரையோர கடற்பரப்பில் சிறிய மற்றும் ஒரு நாள் மீன்பிடி படகுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, கடலின் தன்மை மேம்பட்டவுடன், இந்த தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

காலநிலை அறிக்கைகளை மீறி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடலுக்குச் சென்ற மன்னார், கல்பிட்டி, ஹலவத்தை, நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் 5 கடற்றொழிலாளர்கள் உயிரிழந்தமை தொடர்பில் பணிப்பாளர் நாயகம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாக கடற்றொழிலாளர்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்றும், எந்தப் பகுதியில் பணிபுரியும் போது லைஃப் ஜாக்கெட்டை அணிய வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.