காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட நகரசபை உறுப்பினர் உட்பட 3 பேருக்கு பிணை
காத்தான்குடி நகரசபைக்கு சொந்தமான வடிகான் கொங்கிறீட் மூடியை திருடச் சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்கள் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான தலா இரண்டு பேர் கொண்ட ஆட்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், வழக்கானது செட்டெம்பர் 23ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மூடியின்றி இருந்த வடிகான்
காத்தான்குடி நகரசபையின் சுயேட்சைக்குழு உறுப்பினர் அவரது வட்டாரமான கல்முனை பழைய வீதியிலுள்ள வடிகான் மூடி ஒன்று இல்லாமல் பலவருடங்களாக இருந்துள்ளதுடன் அந்த பகுதி பாடசாலை மாணவர்கள் பள்ளிவாசலுக்கு செல்வோர் உட்பட அந்த வீதி ஊடாக பாதசாரதிகள் பிரயாணிக்க முடியாமல் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்துள்ளனர்.
இது தொடர்பாக சுயேட்சைக்குழுவின் நகரசபை உறுப்பினரின் வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உறுப்பினரிடம் வடிகான் மீது இருந்த மூடி இல்லாததால் அந்த மூடியை அமைத்து தருமாறு கடித மூலம் கோரிக்கையிட்டுள்ளனர்.
இந்த கோரிக்கை தொடர்பாக குறித்த உறுப்பினர் நகரசபை தவிசாளரிடம் கடித மூலமாகவும் வாய்மூலமாகவும் பிரச்சினையை தீர்த்து தருமாறு கோரியுள்ளார்.
ஆனால் கடந்த இரண்டு மாதங்களாகியும் தவிசாளர் அதனை நிறைவேற்றிக் கொடுக்கவில்லை. இதன் காரணமாக நகரசபை உறுப்பினர் அந்த பகுதியில் உள்ள வடிகானுக்கு அருகாமையில் அனாதாரவாக வீதிக்கு அண்மித்த பகுதில் கைவிடப்பட்டிருந்து வடிகான் மூடி ஒன்றை தனது சொந்த பணத்தில் கனரக வாகனம் ஒன்றை வாடகையாக பெற்று அதனை தூக்கி கொண்டு வடிகான் மீது வைத்துள்ளார்.
வழங்கப்பட்ட முறைப்பாடு
இதனையடுத்து குறித்த சுயேட்சைக்குழு உறுப்பினர் தமது களஞ்சியசாலையில் இருந்த நகரசபைக்கு சொற்தமான வடிகான் மூடியை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் நகரசபை களஞ்சியசாலை பொறுப்பாளர் முறைப்பாடு ஒன்றை நேற்றுமுன்தினம் வழங்கியதையடுத்து உறுப்பினர் உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நேற்று மட்டு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, அந்த பகுதியில் மூடி இன்றி ஆபத்தாக கிடந்த வடிகானை சீர் செய்வதற்காக அருகாமையில் இருந்த நகரசபைக்கு சொந்தமான மூடியை எடுத்து அந்த வடிகானை சீர் செய்தார் எனவும், அவர்களுக்கு பிணைகோரி சமர்பணம் முன்வைத்தனர்.
இதனையடுத்து நீதவான் அவர்களை இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ஆள் பிணையில் விடுவித்துள்ளார்.




