முன்னாள் அமைச்சர்களின் பாதாள உலகக்கும்பல்களுடனான தொடர்புகள் அம்பலம்! ஜனாதிபதி தெரிவிப்பு
முன்னாள் அமைச்சர்கள் பலரும் பாதாள உலகக்கும்பல்களுடன் வைத்திருந்த தொடர்புகள் குறித்த தகவல்கள் தற்போது அம்பலமாகியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மத்திய அதிவேகப் பாதையின் கடவத்தை-மீரிகம இடையிலான பிரதேசத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புகள் அம்பலம்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் அமைச்சர்கள் பலரும் பாதாள உலகக்கும்பல்கள்களிடம் இருந்து பணம்பெற்றுக் கொண்டதற்கான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.
ஒரு சில அமைச்சர்கள் மாதம் தோறும் பாதாள உலகக்கும்பல் தலைவர்களின் வீடுகளுக்குச் சென்று ஒரு தொகைப் பணம் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இன்னும் சிலர் அவர்களை தங்களின் வீடுகளுக்கு அழைத்து பணம் பெற்றுக் கொண்டுள்ளனர். தற்போதைக்கு கைதுசெய்யப்பட்டுள்ள பாதாள உலகக்கும்பல் தலைவர்கள் இந்நாட்டின் போதைப் பொருள் வர்த்தகத்தில் 50 வீதத்தை தம் வைத்திருந்தார்கள்.
அவர்களுடன் 75 வீதமான பாதாள உலகக்கும்பல்கள் தொடர்பில் இருந்தன. இவர்கள் நம் நாட்டின் சமூகக் கட்டமைப்பில் பாரிய அழிவுகளை, சேதங்களை ஏற்படுத்தியுள்ளார்கள்.
அவ்வாறான கும்பல்களை நாங்கள் எங்கள் ஆட்சிக்குள்ளாக கட்டாயம் அடக்கியே தீருவோம் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.



