மாணவர் ஒருவரை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்திய ஆசிரியரின் பிணை ரத்து
மாணவர் ஒருவரை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டிருந்த ஆசிரியர் ஒருவர் மீது அதே போன்று மேலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதையடுத்து, அவரது பிணை ரத்து செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 16 வயது சிறுவனை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தியதாக குறித்த ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 9 ஆம் திகதி மாத்தறை - தங்காலை மேல் நீதிமன்றால் வழங்கப்படவுள்ளது.
புதிய குற்றச்சாட்டுகள்
இந்தநிலையில், அவருக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குற்றம் சாட்டப்பட்டவர், 16, 9 மற்றும் 3 வயதுடைய மேலும் மூன்று சிறுவர்களை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தியதாக வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரச சட்டத்தரணி வசந்த திசேர நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த உண்மைகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் தலைமறைவாகி இருந்த நிலையில் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை கருத்திற்கொண்ட தங்காலை, மேல் நீதிமன்ற நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவரின் பிணையை ரத்து செய்ததுடன், முதலாவது வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |