பதுளை பேருந்து விபத்திற்கான காரணம் வெளியானது: 6 பேரின் நிலைமை கவலைக்கிடம்..!
பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது பதுளை போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில், இலக்கம் 9, 10, 15 இல் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (01) காலை பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நீர்வீழ்ச்சியை கடந்து அம்பகஹஓய பிரதேசத்தில் பதுளையில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.
இதில் பேருந்தில் பயணித்த மூன்று விரிவுரையாளர்கள் உட்பட 35 பேர் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பல்கலைக்கழக மாணவிகள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
சாரதியின் உடல்நிலை
மேலும், விபத்திற்குள்ளான பேருந்தின் சாரதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், அது குறித்து வாக்குமூலம் பெற முடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சாரதியினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கடந்த காலங்களில் இவ்வீதியில் சரிவு நோக்கி பயணிக்கும் போது பல வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், பெரும்பாலான விபத்துக்கள் வளைவின் கடைசிப் பகுதியிலேயே இடம்பெறுவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த வீதிகளில் பயணிக்க அப்பகுதியினை சேர்ந்த சாரதிகளுக்கு மாத்திரமே தெரியும் என்றும், வெளி பகுதிகளில் இருந்து வரும் வாகன சாரதிகளுக்கு மலை பகுதியில் வாகனங்களை செலுத்த இயலாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்தின் போது பேருந்தின் சாரதி மற்றும் உதவி சாரதியுடன் 41 பேர் பயணித்துள்ளதுடன், அவர்களில் 36 பேர் மாணவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் விபரம்
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது பதுளை போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில், இலக்கம் 9, 10, 15 இல் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் இறுதி வருட மாணவர்கள் நேற்று (31) பதுளைக்கு வந்து எல்ல பிரதேசத்திற்கு சென்று பின்னர் பசறை பல்கஹதன்ன பிரதேசத்தில் தங்கி பயிற்சி நிகழ்ச்சிக்காக பதுளை வழியாக ரந்தேனிகல நோக்கி சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்துள்ளதுடன், காயமடைந்த பல்கலைக்கழக மாணவர்கள் பதுளை, இரத்தினபுரி, கேகாலை, பாதுக்க, அவிசாவளை, அலவ்வ, குருநாகல் போன்ற நாட்டின் பல பிரதேசங்களில் வசிப்பவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இன்று அல்லது நாளை பேருந்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு விபத்துக்கான காரணம் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்? News Lankasri
