ஐரோப்பாவில் செயற்படும் போதைப்பொருள் கும்பல் - இலங்கையில் சிக்கிய இரண்டு தமிழ் இளைஞர்கள்
இத்தாலியில் இருந்து இயங்கி வந்த போதை பொருள கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் வட்ஸ்அப் மற்றும் ஈசி கேஷ் ஊடாக பதுளை மாவட்டத்தில் ஐஸ் போதைப்பொருள் விநியோக வலையமைப்புடன் தொடர்புபட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளுடன் அம்பகஸ்தோவ பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கெப்பெட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் வர்த்தகம்
ஊவபரணகம, அம்பகஸ்தோவ பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 30 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெப்பெட்டிபொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் துசித குமார தலைமையிலான அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையை தொடர்ந்து, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் வசிக்கும் நபரொருவரால் இந்த போதைப்பொருள் வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் வாடகை முச்சக்கர வண்டிகளில் சென்று, கையடக்கத் தொலைபேசிக்கு கிடைக்கும் வட்ஸ்அப் குறுஞ்செய்திகளுக்கு அமைய, ஈசி கேஷ் முறையில் பணத்தைப் பெற்றுக்கொண்டு போதை பொருள் விற்பனை செய்துள்ளனர்.
பதுளை, பண்டாரவளை, வெலிமடை மற்றும் எல்ல ஆகிய பகுதிகளுக்கு சென்று ஐஸ் போதைப்பொருளை விநியோகிக்கும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.