பலரையும் சோகத்தில் ஆழ்த்திய மாணவர்களின் மரணம்! விபத்திற்கான காரணம் வெளியானது
பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நேற்று பதுளை கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
பதுளை தர்மதூத கல்லூரிக்கும் ஊவா கல்லூரிக்கும் இடையிலான பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன பேரணியின் போது கெப் வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்திற்கான காரணம்
இந்த விபத்தில் பதுளை தர்மதூத வித்தியாலயத்தில் 13ஆம் தரத்தில் கல்வி கற்ற ஆர். எம். ரவிந்து மற்றும் ஹரேந்திர ருக்மால் ஆகிய இரு மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.
இந்த போட்டியின் போது பிரதான வீதியில் வாகன பேரணிக்கு பொலிஸார் தடை விதித்திருந்த நிலையில்,குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக பதுளையில் நிர்மாணிக்கப்பட்ட இடத்தில் வாகன பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதன்போது விபத்திற்குள்ளான வாகனத்தை பாடசாலை மாணவர் ஒருவர் செலுத்தியதாகவும், விளையாட்டு பயிற்சிவிப்பாளர் வாகனத்தை செலுத்த வேண்டாமென மாணவரை பல முறை எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதனையும் மீறி மாணவர்கள் குழு வாகனத்தை செலுத்திய போது மைதானத்தில் காணப்பட்ட இரும்பு தூண் ஒன்றில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தினை இரு பாடசாலைகளுக்கிடையில் வருடாந்தம் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியை இடைநிறுத்துவதற்கு பாடசாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.