இஸ்ரேலுடன் உக்கிரமடையும் யுத்தம்: இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஈரானிய ஜனாதிபதி
பதுளையின் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச(Sachindra Rajapaksa) கூறியுள்ளார்.
மேலும், பதுளையின் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம்(Uma Oya Hydro Power Project) எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக திட்டப் பணிப்பாளர் பொறியியலாளர் டி.சி.எஸ். எலகந்த(T.C.S. Eleganta) தெரிவித்துள்ளார்.
உமா ஓயா பல்நோக்கு திட்டம்
2011ஆம் ஆண்டில், உமா ஓயா பல்நோக்கு திட்டம்¸ஈரானின் ஏற்றுமதி மேம்பாட்டு வங்கியின் கடனுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், புவிசார் அரசியல் தடைகள் ஈரானில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியதால், திட்டத்தின் நிதி உள்நாட்டு திறைசேரி ஒதுக்கீடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் 120 மெகாவாட் மின்சாரத் திறனை தேசிய மின் கட்டத்திற்கு பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அத்துடன் மின்சார உற்பத்திக்கு அப்பால், உமா ஓயா திட்டம், விவசாயம் மற்றும் குடிநீர் விநியோகத்தில் முக்கியமான தேவைகளை நிவர்த்தி செய்யவுள்ளது.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், புஹல்பொல நீர்த்தேக்கத்திலிருந்து சேகரிக்கப்படும் நீர், 4 கிலோமீற்றர் சுரங்கப்பாதையின் ஊடாக, டயரபா நீர்த்தேக்கத்திற்குச் செல்கிறது.
அங்கிருந்து 15.5 கி.மீ சுரங்கப்பாதை மூலம் எல்ல கரந்தகொல்ல பகுதியில் உள்ள இரண்டு நிலத்தடி விசையாழிகளுக்கு தண்ணீர் செல்கிறது.
இந்த விசையாழிகள், ஒவ்வொன்றும் 60 மெகாவாட் உற்பத்தி செய்யும், தேசிய மின் கட்டத்திற்கு பங்களிக்கவுள்ளன.
மின்சார உற்பத்தியைத் தொடர்ந்து,எஞ்சிய நீர் மற்றுமொரு 4 கிலோமீற்றர் சுரங்கப்பாதையின் ஊடாக அலிகொட்டா ஆர நீர்த்தேக்கத்திற்கும், பின்னர் ஹந்தபனகல மற்றும் குடா ஓயா நீர்த்தேக்கங்களுக்கும் அனுப்பப்படவுள்ளன.
இந்தநிலையில் உமா ஓயா திட்டத்தின் மூலம் 15,000 ஏக்கர் நெற்பயிர்களுக்கு பெரும்போக மற்றும் சிறுபோகப் பருவகாலங்களில் நீர் விநியோகம் உறுதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |